அதிகரிக்கப்பட்ட குரூப்-2, 2ஏ பணியிடங்கள் எவ்வளவு? புதிய தகவல்




குரூப்-2, 2ஏ பதவிகளில் அதிகரிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரூப்-2, 2ஏ பதவிகள்...

தமிழ்நாடு அரசுத் துறைகளில் இருக்கும் பணியிடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களுக்கு தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு மூலம் நியமித்து வருகிறது.

அந்த வகையில் குரூப்-2 (நேர்முகத்தேர்வு பணியிடங்கள்), 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வெளியிட்டது. அப்போது குரூப்-2-ல் 116 பணியிடங்களும், குரூப்-2ஏ-ல் 5 ஆயிரத்து 416 இடங்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 529 இடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதமும் நடத்தப்பட்டது.

12-ந் தேதி தேர்வு முடிவு

இதற்கான தேர்வு முடிவு வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் எப்போதுதான் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுமோ என்ற விரக்திக்கே சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கான விளக்கத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டதோடு, தேர்வு முடிவு ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்தது. அந்தவகையில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையில் குரூப்-2, 2ஏ தேர்வு பணியிடங்களில் இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகரிக்கப்பட்ட இடங்கள் எவ்வளவு?

பணியிடங்கள் குறித்த அறிவிப்பு முதலில் வெளியானபோது, குரூப்-2, 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 529 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணியிடங்களில் சில பதவிகளில் இடங்கள் குறைக்கப்பட்டும், சிலவற்றில் கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குரூப்-2 பதவிகளில் 52 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், குரூப்-2ஏ பதவிகளில் ஏற்கனவே வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்த இடங்களில் 78 இடங்கள் குறைக்கப்பட்டு, 675 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் குரூப்-2 பதவிகளில் 118 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 6 ஆயிரத்து 10 இடங்களுக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 128 இடங்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி வெளியாகும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு காத்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments