குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: வேங்கைவயல் வழக்கு முடிவுக்கு வருவது எப்போது? ஓராண்டாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை




வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டாகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் இந்த வழக்கு முடிவுக்கு வருவது எப்போது? என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

குடிநீர் தொட்டியில் அசுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக நேரடி விசாரணை நடைபெற்றது. இதனைதொடர்ந்து அப்பகுதி கிராம மக்களிடைய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

டி.என்.ஏ. பரிசோதனை

இந்த சம்பவம் தொடர்பாக இறையூர், வேங்கைவயல் பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவத்தன்று வாட்ஸ்-அப்பில் இந்த விவகாரம் தொடர்பாக தகவல் பரப்பிய போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரி, அந்த தண்ணீர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரியதில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதேபோல் சமூகநீதி கண்காணிப்பு குழுவினர் பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவும் ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்

இந்த சம்பவத்தில் நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லாததால் இவ்வழக்கில் துப்பு துலங்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். வேங்கைவயல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டன. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிராமப்புற பகுதியான அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாதது, மேலும் புலன்விசாரணைக்கு தேவையான தடயங்கள், அடையாளங்கள் உடனடியாக கிடைக்காதது இவ்வழக்குக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இதனால் அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

வழக்கு முடிவுக்கு வருமா?

வேங்கைவயல் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கிராமத்திற்கு இப்படி ஒரு நிலையா? என்று வேதனை அடைந்துள்ளனர். மற்றொரு தரப்பினரும் இந்த விவகாரத்தில் போலீசார் உண்மை குற்றவாளிகளை கைது செய்து வெளிஉலகிற்கு காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. வேங்கைவயல் வழக்கு விரைவில் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments