அன்னவாசல் அருகே நார்த்தாமலை காப்புக்காட்டில் மலைப்பாம்பு சரணாலயம் அமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு






அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை காப்புக்காட்டில் மலைப்பாம்பு சரணாலயம் அமைக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நார்த்தாமலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே நார்த்தாமலை உள்ளது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இதுமட்டுமின்றி நார்த்தாமலை மலை மீதுள்ள விஜய சோழிஸ்வரர் கோவில், குகை தர்ஹா, சுனைலிங்கம் போன்றவை பிரசித்தி பெற்றவையாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் பரந்து விரிந்துள்ள பகுதியாக அன்னவாசல் அருகேயுள்ள நார்த்தாமலை விளங்குகிறது. சுமார் 700 எக்டேர் பரப்பளவு உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான பாம்புகள், முயல், நரி, மயில், மான், ஆந்தை, எறும்புத்தின்னி, மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

மலைப்பாம்புகள்....

இந்தநிலையில் அன்னவாசல், இலுப்பூர், பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பெருமநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்வெளி, குடியிருப்பு பகுதிகளில் அண்மை காலமாக மலைப்பாம்புகள் அவ்வப்போது சுற்றித்திரிகிறது. மேலும் அவை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆடு, கோழி, கன்றுக்குட்டிகளை விழுங்கி விடுகிறது. அன்னவாசல், இலுப்பூர் வனச்சரகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் சுற்று வட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வனத்துறையினர் உயிருடன் பிடித்து நார்த்தாமலை வன காப்புக்காட்டில் விட்டுள்ளனர்.

இதேபோல் குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் பிடிபடும் மலைப்பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டுள்ளனர். எனவே, நார்த்தாமலை வனச்சரகத்தில் மலைப்பாம்புக்கான சரணாலயம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரணாலயம் அமைக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஷாஜஹான் கூறியதாவது:- நார்த்தாமலை காப்புக்காட்டில் பழ வகை மரங்கள், மூலிகை மரங்கள் நட்டு பராமரித்தால் பறவைகள் மற்றும் மான்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கு பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்களும் உள்ளன. இந்த வனத்தினை மான் மற்றும் மலைப்பாம்புகளின் சரணாலயமாக மாற்றுவதின் மூலம் புதுக்கோட்டை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாறும். மேலும் வன விலங்குகள் வாழ்வு பெறும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. நார்த்தாமலை காப்புக்காட்டில் மலைப்பாம்பு சரணாலயம் அமைத்தால் மலைப்பாம்புகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments