புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மாணவர்கள் ஆர்வமுடன் படைப்புகளை காட்சிப்படுத்தினர்




புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

அறிவியல் கண்காட்சி

புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கண்காட்சியில் படைப்புகளை ஆர்வமுடன் காட்சிப் படுத்தினர்.

மாணவ-மாணவிகளிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் அறிவியல் நாட்டத்தின் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சியில் ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் இணைந்து பங்கேற்க கூடிய தனிப்பட்ட வகை, 2 மாணவர்கள், ஒரு ஆசிரியர் இணைந்து பங்கேற்க கூடிய குழு வகை, ஒரு ஆசிரியர் மட்டும் பங்கேற்க கூடிய ஆசிரியர் வகை ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்றனர்.

70 படைப்புகள்

இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியியல், உயிர் வேதியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் மொத்தம் 70 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதிலிருந்து முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெறுபவர்கள் கடலூர் மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 8- ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

அதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவில் 6 மாநிலங்களுக்கிடையே நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பார்கள். கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ரமேஷ், கண்காட்சி ஒருங்கிணைப்பு தலைமையாசிரியர்கள் ஜெயராஜ், சோமசுந்தரம், முத்துக்குமார், மாவட்டச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments