ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி ரூ.21 ஆயிரம் திருட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு




ஒரத்தநாட்டில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் ரூ.21 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.21 ஆயிரம் திருட்டு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி சாந்தி (வயது30). இவர் கடந்த 27-ந் தேதி ஒரத்தநாட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் சாந்தியிடம் உதவி செய்வது போல் பேசி, அவரது ஏ.டி.எம். கார்டையும், ரகசிய நம்பரையும் கேட்டு பெற்றுள்ளார்.

பிறகு எந்திரத்தில் பணம் வரவில்லை எனக்கூறி ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். ஆனால் சற்று நேரத்தில் சாந்தியின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கில் இருந்து ரூ.21 ஆயிரத்து 500 ஏ.டி.எம். எந்திரம் மூலம் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.

போலி கார்டு கொடுத்து ஏமாற்றம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்த போது, அதில் உதவி செய்வது போல் நடித்த மர்ம நபர் ஏ.டி.எம்.கார்டையும், ரகசிய நம்பரையும் பெற்றுக்கொண்டு சாந்தியிடம் ஒரு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து சென்றதும், மற்றொரு ஏ.டி.எம்.எந்திரத்தில் சாந்தியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.21 ஆயிரத்து 500-ஐ திருடி சென்றதும் தெரிய வந்தது.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து சாந்தி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு தடயங்களை சேகரித்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments