தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு




தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது.

கலகலப்பாக்கும் வர்ணனை

ஜல்லிக்கட்டு என்றாலே திருவிழா போல நடைபெறும். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்குவதும், அதேநேரத்தில் களத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் தண்ணி காட்டி, பந்தாடுவதும் பரபரப்பாக இருக்கும். இந்த வீர விளையாட்டை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு விடுவார்கள்.

களத்தில் காளைகளையும், காளையர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் கூட்டத்தில் விசில் பறக்கும். மேலும் ஒலிபெருக்கியிலும் வர்ணனை அந்த இடத்தையே கலகலப்பாக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு அமோக வரவேற்பு இருக்கும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்க உள்ளது.

தச்சங்குறிச்சி

தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். அதே நேரத்தில் தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. மேலும் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதிலும் புதுக்கோட்டை முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தச்சங்குறிச்சியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசல், கேலரி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தயாராகும் காளைகள்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும். முதல் ஜல்லிக்கட்டு தொடங்கிய பின் அடுத்து வரிசையாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு களை கட்டும். ஜனவரி முதல் மே மாதம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டும். கோவில் திருவிழாக்களில் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு காணப்படும்.

இதேபோல் வடமாடு, மஞ்சுவிரட்டும் நடைபெறும். ஜல்லிக்கட்டு தொடங்க உள்ள நிலையில் களத்தில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்வதற்கு, கொம்புகளால் முட்டி தூக்கி தள்ளுவதற்கும் காளைகளின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளை அடக்குவதற்கும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2023) ஜல்லிக்கட்டு 48-ம், மஞ்சுவிரட்டு 7-ம், வடமாடு மஞ்சுவிரட்டு 17-ம் என மொத்தம் 72 எண்ணிக்கையில் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடா்பாக தேதி அறிவிப்பானதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா அடுத்தடுத்து விரைந்து முடிக்க அந்தந்த பகுதியினர் தயாராகி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments