தொண்டி நூலகக் கட்டுமானப் பணி: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு




தொண்டியில் நூலகக் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட நூலகம் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நூலகம் பழுதடைந்ததால், தற்போது மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே வழக்கு தொடுத்தேன். இதில், பழைய நூலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஓராண்டு கடந்தும் இந்த நூலகக் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்பட வில்லை. இந்தச் சூழலில், நூலகக் கட்டுமானத்துக்கான இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நூலகக் கட்டடத்தை விரைந்து கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிய நூலகத்தின் கட்டுமானத்துக்கான பரிந்துரைக் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சேதமடைந்த நூலகக் கட்டடத்தை இடித்து ஓராண்டு கடந்த பிறகும், புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை ஏன் தொடங்க வில்லை. நூலகம் மாணவா்களின் எதிா்காலத்தை தீா்மானிக்கக் கூடியது. நூலகக் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில் கட்டுமானம் தொடங்கியதற்கான தகவல் இருக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்க நேரிடும். வழக்கு விசாரணை வருகிற 22- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments