கீழக்கரையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி




கீழக்கரையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் ஆவார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை நகராட்சியில் மின்மோட்டார் பழுதை சரிசெய்து மின் பல்புகள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பணிகளை மேற்கொண்டார். இதுசம்பந்தமாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை பற்றி கேட்டுள்ளார்.

நகராட்சி உதவி அலுவலர்கள் உதயகுமார், சரவணன் ஆகியோரிடம் காசோலை வழங்க நகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஒப்பந்ததாரர் முரளி, அலுவலர் உதயகுமாரை பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காசோலை தருவேன் என்று பிடிவாதமாக கூறியதாக தெரிகிறது.

கைது

இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்பந்ததாரர் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை உதயகுமாரிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை சரவணனிடம் கொடுத்து விட்டு நாளை வந்து காசோலை பெற்று கொள்ளுமாறு கூறி இருக்கிறார். அந்த பணத்தை சரவணன் வாங்கி உள்ளார்.

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் உதயகுமாரையும், சரவணனையும் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments