மங்கனூர் கிராமத்தில் ரூ. 127.72 கோடி திட்ட மதிப்பீட்டில் கடற்பாசிகள் பதப்படுத்தும் பூங்கா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.



கந்தர்வகோட்டையில் கடல் பாசியில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதின் மூலம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் கடல் பாசியில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. அதற்கான இடத்தை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவ பெண்கள் கடல்பாசிகளை இங்கு கொண்டு வந்து அதை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதே இந்த தொழிற்சாலையின் பணியாக இருக்கும். தொழிற்சாலைகள் இல்லாத கந்தர்வகோட்டை பகுதி மக்கள் வேலைவாய்ப்பை பெறுகின்ற வகையில் மதிப்பு கூட்டு தொழிற்சாலை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்படுகின்ற தொழிற்சாலையில் பல்வேறு தொழில் துறையினர் மூலம் மருத்துவம் சார்ந்த பொருட்கள், ஊட்டச்சத்து பொருட்கள், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட பல்வேறு வகையான மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

வேலைவாய்ப்பு

78 எக்டேர் நிலத்தில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இங்கு அமைக்கப்படுகின்ற தொழிற்சாலையின் மூலம் இந்த பகுதியில் உள்ள பெண்கள் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சின்னதுரை எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் ராமசாமி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments