தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயரில் கடலோர பகுதிகளையும், உயிரினங்களையும் பாதுகாக்க ரூ.1,675 கோடியில் திட்டம் அரசாணை வெளியீடு


எதிர்காலத்தில் கடலோர பகுதிகளையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் ரூ.1,675 கோடி செலவில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடுமையான பாதிப்பு

இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தபோது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதில், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும் கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வரும் காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.

கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்தை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

5 பிரிவில் திட்டங்கள்

அதைத்தொடர்ந்து உலக வங்கியின் உதவி கோரப்பட்டது. உலக வங்கி கேட்டபடி, திட்ட தொடக்க அறிக்கையை அரசு அளித்தது. அதைத்தொடர்ந்து திட்ட முன்மொழிவுக்கான அங்கீகாரத்தை உலக வங்கி அளித்துள்ளது.

இந்தத் திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடலோரத்தை பாதுகாத்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாசுபடுதலை தணித்தல், திட்ட மேலாண்மை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.

கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துதல் பிரிவின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைத்தல்; நாகை மற்றும் சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையம் அமைத்தல்; கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு மையத்தை தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைத்தல்; பள்ளிக்கரணை உள்ளிட்ட கடலோர சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ரூ.1,675 கோடி செலவு

இந்த 5 பிரிவின் கீழ் வரும் திட்டங்களை செயல்படுத்த ரூ.1,675 கோடி தொகை செலவாகிறது. இந்தத் தொகையில் ரூ.1,172.50 கோடியை உலக வங்கியும், ரூ.502.50 கோடியை தமிழக அரசும் பங்களிக்கும். திட்ட காலமான 2024-29-ம் ஆண்டுகளில் திட்டத் தொகை 5 ஆண்டு வாரியாக பிரித்தளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தை திறன்பட செயல்படுத்தும் வகையில், சிறப்பு திட்ட கண்காணிப்பு பிரிவையும், 5 ஆண்டுகளுக்கு மனித சக்தியையும் உருவாக்குவதற்காக ரூ.100 கோடி தொகையை வழங்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை தலைமைச்செயலாளர் தலைமையில் அமைத்து அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments