ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் வேன்கள் நேருக்குநேர் மோதி 3 பேர் பலி; 16 பேர் படுகாயம் வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்




ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் 2 வேன்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 வேன்கள் மோதல்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ராமேசுவரம் வந்திருந்தனர். பின்னர் அவர்கள், ராமேசுவரத்தில் இருந்து வேன் ஒன்றில் தனுஷ்கோடி சென்றனர்.

இந்த வேனை ராமேசுவரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த நாகநாதன் (வயது 52) ஓட்டிச்சென்றார்.

இதே போல் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து வடமாநில சுற்றுலா பயணிகளுடன் வேன் ஒன்று ராமேசுவரம் நோக்கி வந்தது.

இந்த வேனை உச்சிப்புளி செம்படையார்குளம் பகுதியை சேர்ந்த முரளி (31) என்பவர் ஓட்டினார். இந்த 2 வேன்களும் எதிர்பாராதவிதமாக தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள சாலையில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு வேன் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

3 பேர் பலி

இது பற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

2 வேன்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநிலத்தினரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அனைவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இருந்தாலும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மனுபாய் (42) நாதன் பாய் (70) ஆகிய 2 பெண்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டனர். இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக அதே மாநிலத்தை சேர்ந்த முதியவர் கிர்தாரி(70) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

16 பேருக்கு சிகி்ச்சை

படுகாயம் அடைந்த வேன் டிரைவர்கள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் என மொத்தம் 16 பேர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தனுஷ்கோடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சாகித் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments