மணமேல்குடி அருகே காரில் கடத்திய ரூ.7½ லட்சம் கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது






மணமேல்குடி அருகே காரில் கடத்தி சென்ற ரூ.7½ லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் ேபாதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தலைமையிலான போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம் தலைமையில் மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் நாமிக் இப்ராஹிம் மற்றும் போலீசார் ஆவுடையார்கோவில்- மணமேல்குடி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே சிவப்பு நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது.

ரூ.7½ லட்சம் கஞ்சா

இதையடுத்து அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் மணமேல்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்த சீராளன் மகன் பிரகாஷ் (வயது 34), மணமேல்குடி குருநாமடம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அய்யப்பன் (25), நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் மகன் கோகுல் (20) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் 41 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். இவர்கள் ஆவுடையார்கோவிலில் இருந்து மணமேல்குடி கடற்கரை பகுதிக்கு கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இதனைதொடர்ந்து காரில் வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments