மாட்டுப்பொங்கல்,தொடர் விடுமுறையை முன்னிட்டு கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்




மாட்டுப்பொங்கல், தொடர் விடுமுறையை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்படுகின்றன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.

மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மாட்டுப்பொங்கல் தினமான நேற்று மீன்களை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.

அசைவ பிரியர்கள்...

மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் அதற்கு அடுத்த நாள் அசைவம் சாப்பிடுவார்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் தவிர மற்ற அனைவரும் அசைவத்தை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதாலும் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் பணிபுரியக்கூடியவர்கள் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் திரும்பியுள்ளதாலும் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க குவிந்தனர். நகரத்தில் உள்ளவர்கள் கோழி, ஆடு போன்ற இறைச்சிகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் உயிர் மீன் கட்டுமாவடியில் மட்டுமே கிடைக்கும் என்பதால் கட்டுமாவடி மார்க்கெட்டிற்கு மீன் வாங்க வருகை தந்தனர்.

இதேபோல் கோழி மற்றும் ஆடு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணி முதல் கட்டுமாவடியில் மக்கள் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments