இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்




தமிழகத்தில் 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

பெயர் நீக்கம், சேர்ப்பு

1.1.2024 அன்றைய தேதியை வாக்காளராக தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்று வந்தன. 27.10.23 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 9.12.23 அன்று நிறைவடைந்தன. சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13 லட்சத்து 88 ஆயிரத்து 121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13 லட்சத்து 61 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6 லட்சத்து 17 ஆயிரத்து 623; பெண்கள் 7 லட்சத்து 43 ஆயிரத்து 803; மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு, பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.பெயரை நீக்குவதற்காக 6 லட்சத்து 43 ஆயிரத்து 307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 737 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவற்றில் இடப்பெயர்ச்சிக்காக 3 லட்சத்து 71 ஆயிரத்து 537 பெயர்களும்; இறந்து போனதால் 1 லட்சத்து 33 ஆயிரத்து 477 பெயர்களும்; இரட்டைப்பதிவு காரணங்களுக்காக 97 ஆயிரத்து 723 பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன. திருத்தங்களுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 997 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 487; பெண்கள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 343; மூன்றாம் பாலினத்தவர் 167) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள்

இந்த பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330; பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 மற்றும் 3-ம் பாலினத்தவர் 8,294 பேராகும். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அதிகம், குறைவு

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி, செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் ஆகும். அங்கு 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. அங்கு மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக, சென்னை மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 624 வாக்காளர்கள் உள்ளனர்.

வெளிநாடுவாழ் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 71 பெயர்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் சேர்க்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 18-19 வயதுள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 35; பெண்கள் 2 லட்சத்து 52 ஆயிரத்து 96; மூன்றாம் பாலினத்தவர் 74 ஆகும். வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ளலாம்.

செயலி

1.1.2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அல்லது, www.voters.eci.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அல்லது, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Voter Helpline App செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் இணைப்பு

இதுவரை 4.29 கோடி (69.38 சதவீதம்) ஆதார் எண்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டு உள்ளன. அச்சிடப்பட்ட 2 வாக்காளர் பட்டியல் நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலும் தகவல் பெறலாம்.

7 லட்சம் பேர் அதிகம்

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 27.10.23 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 7 லட்சம் பேர் அதிகமாகி இந்த இறுதி பட்டியலில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அட்டையை அனுப்புவோம். அவற்றை அனுப்பும் பணி இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். அந்த வகையில் 15 லட்சம் முதல் 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் ஆகும் செலவு பற்றி இனி முடிவு செய்யப்படும்.

பொன்முடி தகுதிநீக்கம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி தகுதி நீக்கம் தொடர்பான தகவலை சட்டசபை செயலகத்தில் இன்னும் பெறவில்லை. அது வந்ததும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 33 ஆகும். தற்போது அந்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர்: 20 லட்சத்து 58 ஆயிரத்து 98 வாக்காளர்கள்.

சென்னை வடக்கு: 14 லட்சத்து 84 ஆயிரத்து 689.

சென்னை தெற்கு: 20 லட்சத்து 7 ஆயிரத்து 816.

சென்னை மத்தி : 13 லட்சத்து 43 ஆயிரத்து 167.

ஸ்ரீபெரும்புதூர்: 23 லட்சத்து 58 ஆயிரத்து 526.

காஞ்சீபுரம்: 17 லட்சத்து 32 ஆயிரத்து 946.

அரக்கோணம்: 15 லட்சத்து 53 ஆயிரத்து 989.

வேலூர்: 15 லட்சத்து 9 ஆயிரத்து 964.

கிருஷ்ணகிரி: 16 லட்சத்து 9 ஆயிரத்து 913.

தர்மபுரி: 15 லட்சத்து 12 ஆயிரத்து 732.

திருவண்ணாமலை: 15 லட்சத்து 21 ஆயிரத்து 787.

ஆரணி: 14 லட்சத்து 90 ஆயிரத்து 440.

விழுப்புரம்: 14 லட்சத்து 94 ஆயிரத்து 259.

கள்ளக்குறிச்சி: 15 லட்சத்து 58 ஆயிரத்து 749.

சேலம்: 16 லட்சத்து 48 ஆயிரத்து 911.

நாமக்கல்: 14 லட்சத்து 44 ஆயிரத்து 36.

ஈரோடு: 15 லட்சத்து 28 ஆயிரத்து 241.

திருப்பூர்: 15 லட்சத்து 98 ஆயிரத்து 443.

நீலகிரி: 14 லட்சத்து 18 ஆயிரத்து 915.

கோவை: 20 லட்சத்து 83 ஆயிரத்து 34.

பொள்ளாச்சி: 15 லட்சத்து 81 ஆயிரத்து 795.

திண்டுக்கல்: 15 லட்சத்து 97 ஆயிரத்து 458.

கரூர்: 14 லட்சத்து 21 ஆயிரத்து 494.

திருச்சி: 15 லட்சத்து 44 ஆயிரத்து 742.

பெரம்பலூர்: 14 லட்சத்து 39 ஆயிரத்து 315.

கடலூர்: 14 லட்சத்து ஆயிரத்து 392.

சிதம்பரம்: 15 லட்சத்து 10 ஆயிரத்து 915.

மயிலாடுதுறை: 15 லட்சத்து 38 ஆயிரத்து 351.

நாகை: 13 லட்சத்து 38 ஆயிரத்து 459.

தஞ்சாவூர்: 14 லட்சத்து 94 ஆயிரத்து 216.

சிவகங்கை: 16 லட்சத்து 22 ஆயிரத்து 574.

மதுரை: 15 லட்சத்து 76 ஆயிரத்து 745.

தேனி: 16 லட்சத்து 12 ஆயிரத்து 503.

விருதுநகர்: 14 லட்சத்து 91 ஆயிரத்து 695.

ராமநாதபுரம்: 16 லட்சத்து 6 ஆயிரத்து 14.

தூத்துக்குடி: 14 லட்சத்து 48 ஆயிரத்து 159.

தென்காசி: 15 லட்சத்து 16 ஆயிரத்து 183.

நெல்லை: 16 லட்சத்து 42 ஆயிரத்து 305.

கன்னியாகுமரி: 15 லட்சத்து 47 ஆயிரத்து 378.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 வாக்காளர்களும்; குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 459 வாக்காளர்களும் உள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments