கழிவுநீர் வாய்க்கால் கரையை பலப்படுத்தியபோது புதிதாக கட்டிய 3 மாடி வீடு சரிந்து விழுந்தது புதுமனை புகுவிழாவுக்கு தயாரான நிலையில் சோகம்
புதுவையில் உள்ள உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் கரையை பலப்படுத்தும் பணியின் போது 3 மாடி வீடு இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு புதுமனை புகுவிழாவுக்கு தயாரான நிலையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கழிவுநீர் வாய்க்கால்

புதுவை ஜீவா நகர் 45 அடி சாலையில் இருந்து காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, வம்பாக்கீரப்பாளையம், உப்பளம் வழியாக உப்பனாறு வாய்க்கால் கடல் பகுதியை சென்றடைகிறது.

நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களில் இருந்து இந்த வாய்க்கால் வழியாக தான் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.

சரிந்து விழுந்தது

தற்போது வாய்க்காலின் கிழக்கு கரையோர பகுதியில் கட்டுமானத்துக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் சாவித்திரி என்பவர் புதிதாக கட்டி முடித்து குடிபுக தயாராக இருந்த 3 மாடி வீடு திடீரென்று விரிசல் ஏற்பட்டு நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சரியத் தொடங்கியது.

இதைப்பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களது கண் முன் அடுத்த சில நிமிடங்களில் 3 மாடி வீடு சீட்டு கட்டு போல் கழிவுநீர் வாய்க்காலில் 2 துண்டுகளாக சரிந்து விழுந்தது.

சோகம்

சரிந்து விழுந்த வீட்டின் அருகே வசித்து வந்த தேவி என்பவரின் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. 3 மாடி வீடு சரிந்து விழுந்த போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 11-ந்தேதி புதுமனை புகுவிழா (கிரகப்பிரவேசம்) நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

மறியல்

இந்தநிலையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலையடிகள் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்ததால் அவர்களது போராட்டம் நீடித்தது.இந்நிைலயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments