இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,36,605 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்




புதுக்கோட்டையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 ஆகும். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


அதன்பின்னர் அவர் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 574 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 75 ஆயிரத்து 969 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

10,557 வாக்காளர்கள் நீக்கம்

2024-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதியின் படி மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பிறகு நடைபெற்ற சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது 13,809 ஆண் வாக்காளர்கள், 17,552 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 364 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

4,794 ஆண் வாக்காளர்கள், 5,758 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,557 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தத்தில் மொத்தம் 9,139 மனுக்கள் பெறப்பட்டு 8,797 மனுக்கள் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 21,142 இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பெண்கள் அதிகம்

மாவட்டத்தில் மொத்தம் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் நகர எல்கைக்குள் 83 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 864 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments