காரைக்கால் கடற்கரையில் சோகம் கடல் அலையில் சிக்கி கும்பகோணம் கல்லூரி மாணவி பலி- 2 மாணவர்கள் மாயம் மூச்சுத்திணறலுடன் 3 மாணவர்கள் மீட்பு
காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த போது கடலில் குளித்த கும்பகோணம் கல்லூரி மாணவி அலையில் சிக்கி பலியானார். அவரை மீட்கும் முயற்சியில் கடலில் குதித்த 2 மாணவர்கள் மாயமாகினர். 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

சுற்றுலா வந்தவர்கள்

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் இறுதியாண்டு படித்து வந்த மாணவ, மாணவிகள் என 13 பேர் காரைக்கால் கடற்கரை சுற்றுலா வந்துள்ளனர். காரைக்கால் கடலில் இறங்கி அவர்கள் உற்சாகமாக குளித்து விளையாடினர். அப்போது ஹேமமாலினி (வயது20) என்ற மாணவி, கடலோரத்தில் சிறிது நேரம் குளித்துவிட்டு திரும்பி விடுகிறேன் என்று கூறி திடீரென கடலில் இறங்கியுள்ளார்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஹேமமாலினி கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’ என அலறி அபயக்குரல் எழுப்பினார்.

இதனால் பதறிப் போன மற்ற மாணவர்கள் ஹேமமாலினியை காப்பாற்றும் முயற்சியில் கடலில் குதித்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய ஹேமமாலினியை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காமல் ஹேமமாலினி இறந்து போனார்.
3 பேர் மீட்பு- 2 மாணவர்கள் மாயம்

அதேநேரத்தில் ஹேமமாலினியை காப்பாற்ற கடலில் குதித்த ரிதன்யா (20), மைக்கேல் (20), புகழேந்தி (25), ஆகியோர் மூச்சுத் திணறலோடு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஹேமமாலினியை காப்பாற்ற அலைகளோடு போராடிக் கொண்டிருந்த அபிலேஷ் (20), ஜெகதீஷ்வரன் (20) ஆகிய மாணவர்கள் கடலுக்குள் மாயமானது தெரியவந்தது. இதனால் மற்ற மாணவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரைக்கால் கடலோர காவல் படை மற்றும் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் விவரம்

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில், போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கடலோர காவல் படை படையினரை வரவழைத்து கடலில் மாயமான மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

உயிரிழந்த மாணவி ஹேமமாலினியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் அலையில் சிக்கியவர்கள் பற்றிய விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பலியான ஹேமமாலினி திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் சுந்தரேசன். மாயமான அபிலேஷ் திருவாரூர் மாவட்டம் வடமட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் அஜய்குமார். மற்றொரு மாணவரான ஜெகதீஷ்வரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் லெனின்.

தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்காலில் சோகம்

கடலில் குளித்த போது கல்லூரி மாணவி உயிரிழந்ததும், 2 மாணவர்கள் மாயமானதும் காரைக்காலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரைக்கால் கடல் பகுதியில் பலர் அலையில் இழுத்துச் செல்லப்படுவதால், கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும், கடலோர காவல் படைக்கு அதிநவீன ரோந்துக் கப்பலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

குளிக்க தகுதி இல்லாத கடற்கரை 

காரைக்கால் கடற்கரை பகுதி கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு குளிக்க தகுதி இல்லாத கடற்கரை பகுதியாக அறிவிக்கப்பட்டது. அலைகளின் சீற்றம் இங்கு அதிகமாக காணப்படுவதால், இப்பகுதியில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. போலீசாரும் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி கடலுக்குள் இறங்குவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டு சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments