பிரதமர் மோடி தமிழகம் வருகை: பாம்பன் புதிய ரெயில் பாலம் பிப்ரவரியில் திறப்பு ?




பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலம் அப்போது திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இதற்காக கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் இருந்து மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் அமையும் இடம் வரையிலும் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது தண்டவாளம் பொருத்தும் பணிகளும், பாலத்தின் ஓரப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பொருத்தும் பணியும் முடிவடைந்துள்ளன.

பணிகள் மும்முரம்

இதனிடையே மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து வடிவமைக்கும் பணி கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவனமான ஆர்.வி.என்.எல். அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தூக்குப்பாலத்தின் பணி கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டதால், இன்னும் ஒரு வாரத்தில் நகரும் கேன்ட்ரி மூலம் தூக்குப்பாலத்தை நகர்த்தி மையப்பகுதிக்கு கொண்டு வந்து பொருத்தப்பட உள்ளது. இந்த தூக்குப்பாலத்தின் நீளம் 77 மீட்டராகும். எடை 600 டன், உயரம் சுமார் 5 மீட்டர் இருக்கும்.

இதனை இயக்குவதற்கும், கடலுக்குள் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் வைப்பதற்கும் ஆப்ரேட்டர் அறை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது” என்றார்.

பிரதமர் மோடி வருகை

பா.ஜனதா கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன் கூறுகையில், “பிரதமர் மோடி பிப்ரவரியில் தமிழகம் வருவதாகவும், அப்போது பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை அவர் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்” என்றார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments