தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரம் - கட்டுமாவடி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சம்பைப்பட்டினத்தில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் 5 மாவட்ட புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024 பிப்ரவரி 07 புதன்கிழமை காலை 8 மணி முதல் பிப்ரவரி 08 வியாழக்கிழமை இஷா வரை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த இஜ்திமாவில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்த இஜ்திமாவில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்த உள்ளார்கள்
இஜ்திமாவில் பங்கேற்ற மக்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக தண்ணீர் பைப்புகள் மேடைகள் அமைக்கப்படுகிறது
அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட உள்ளன
மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளன
அதேபோல் ஐவேளைத் தொழுகையும் மாநாட்டு திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது
மேலும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இஜ்திமா ஏற்பாட்டாளர்கள் மூலம் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தப்லீக் ஜமாஅத்
------------------------
இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் இப்படி ஒரு ஆன்மிக இயக்கம் உருவானதும் நிலைநின்றதும் இதுவரை கிடையாது.
==================
கட்டுரை கொஞ்சம் நீளம் தான்.
கட்டாயம் படித்து விடுங்கள்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இடித்து நாசமாக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் அதிகார பெருமைகளையும், சிதிலமடைந்து போன முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டுகால அறிவுப் பாரம்பரியத்தையும் மீள்கட்டமைப்பு செய்யும் பெருங்கனவுடன் 1865 ஆம் ஆண்டு ஒரு மாதுளை மரத்தின் நிழலில் தாருல் உலூம் தேவ்பந்த் அரபு மதரஸா மெளலானா காசிம் நானூத்வி,மெளலானா ரஷீத் அகமது கங்கோஹி ஆகிய இரண்டு இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
தாருல் உலூம் தேவ்பந்த் மதராஸாவை உருவாக்கிய இருவரில் மெளலானா ரஷீத் அஹமது கங்கோஹி அவர்களிடம் குழந்தை பருவத்திலேயை சீடராக சேர்ந்து 10 ஆண்டுகள் ஆன்மிகப் பயிற்சி பெற்றவர் தான் மெளலானா இலியாஸ் காந்தளவி. தாருல் உலூம் தேவ்பந்தின் மாணவர்.
அல்லாஹ்வுடைய பாதையில் தூய்மையான எண்ணமும் தீனைப்பற்றிய கவலையும் நிறைந்த சில நல்ல மனிதர்களின் முயற்சிகள் அடுத்தடுத்த காலங்களில் பல நல்ல மனிதர்களை உருவாக்கும். அவர்களை சங்கிலித் தொடராக இணைத்து பல சரித்திர சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு தாருல் உலூம் தேவ்பந்தத் மதரஸா ஒரு உன்னதமான உதாரணம்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அதாவது அன்றைய வடஇந்திய (பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட ) கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் ஈமானிய நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. பள்ளிவாசல் மிம்பருக்கு அருகில் பிள்ளையார் சிலையை வைத்து பூஜிப்பது சர்வசாதாரணமான நிகழ்வாக இருந்தது.
1875 இல் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் என்ற இந்துத்துவ அமைப்பினர் ஷுத்தி இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி முஸ்லிம்களின் ஏழ்மையை அறியாமையை அதிகாரமின்மையை பயன்படுத்தி ஆரிய மதத்துக்கு மதம் மாற்றுவதை முதன்மை திட்டமாக செயல்படுத்தினர்.
1923 இல் ஆரிய சமாஜத்தின் ஷ்ரத்தானந்தா என்ற இந்துத்துவ துறவி பாரதீய ஹிந்து ஷுத்தி மகாசபா என்ற அமைப்பை துவங்கி உ.பி. யின் மால்கானா பகுதி ரஜபுத் குஜ்ஜார் ஜாட் இன முஸ்லிம்களை மதம் மாற்றுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்தார்.
1923 முதல் 1927 வரையிலான 4 ஆண்டு காலத்தில் ஒரு இலட்சத்து அறுபத்து மூன்றாயிரம் முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டனர்.இந்த ஷுத்தி இயக்கம் வட இந்திய முஸ்லிம் சமூகத்தில் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியது.
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய பயிற்சியும் பள்ளிவாசல் தொடர்பும் இல்லாததே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்பதை மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்கள் உணர்ந்தார்கள்.கவலையோடும் கண்ணீரோடும் இதற்கான நிரந்தர தீர்வை தேடினார்கள். அல்லாஹ்வின் பெருங்கருணையினால் மௌலானா அவர்களின் உள்ளத்தில் உதித்த நிரந்தர தீர்வு தான் தப்லீக் ஜமாஅத்.
மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களால் "முஸ்லிம்களே இஸ்லாத்திற்கு திரும்புங்கள் " என்ற முழக்கத்தை முன்னிறுத்தி 1926 ஆம் ஆண்டு டெல்லி நிஸாமுத்தீனில் வைத்து தப்லீக் ஜமாஅத் அமைப்பு துவங்கப்பட்டது.
ஒரு முஸ்லிமுடைய அனைத்து வெற்றிக்கும் ஐங்காலத் தொழுகையை தீர்வாக பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னிறுத்தியுள்ளதை அப்படியே பின்பற்றத் துவங்கியது தப்லீக் ஜமாஅத்.
முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கும் அல்லாஹ்வுடைய பாதையில் 1926 முதல் பயணிக்கத் துவங்கி ஒரு நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்யப் போகிறது இந்த மகத்தான ஆன்மிக இயக்கம்.
தப்லீக் ஜமாஅத்துக்கு கொடி கிடையாது.அரசியல் கோஷங்கள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் கிடையாது.உறுப்பினர் அட்டை கிடையாது.IT Wing கிடையாது.ஆனால் தப்லீக் இஜ்திமா என்றால் பல்லாயிரம் - பல இலட்சம் முஸ்லிம்கள் கூடுகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 8 கோடி ஆதரவாளர்களுடன் 150 நாடுகளில் தப்லீக் ஜமாஅத் இயங்கி வருகிறது. பிரிட்டனில் உள்ள 1350 பள்ளிவாசல்களில் 600 பள்ளிவாசல்களில் தப்லீக் ஜமாஅத்தின் தினசரி நடவடிக்கைகள் நடக்கிறது.
ஆலிம்கள் படித்தவர்கள் பணக்காரர்கள் அரசு ஊழியர்கள் என எல்லோரும் கலந்த ஜமாஅத்தாக தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அல்லாஹ்வுடைய பாதையில் சட்டிபொட்டியை தூக்கிக் கொண்டு பல நாட்கள் பல மாதங்கள் நகரங்கள் கிராமங்கள் மலைப்பகுதிகள் பாலைவனங்கள் என்று மிகவும் சிரமமான பாதைகளில் பயணித்து முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கின்றனர்.
இந்த நூறு ஆண்டுகளில் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சகித்துக்கொண்டு பலகோடி முஸ்லிம்களை பள்ளிவாசல்களுக்கு அழைத்து வந்து ஐங்காலத் தொழுகையோடு இணைத்துள்ளனர்.கல்நெஞ்சக்காரர்களுக்கும் கரடுமுரடான முஸ்லிம்களுக்கும் மரணத்தை நினைவூட்டி பயபக்தியுடைவர்களாக மாற்றி காட்டியுள்ளனர்.
கோடிக்கணக்கான முஸ்லிம்களை மூஃமின்களாக தரம் உயர்த்தி ஷரிஅத் சட்ட வரையறைக்குள் கொண்டு வந்துள்ளனர். துஆ எப்படி செய்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தவர்களுக்கு துஆவின் முறைகளையும் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைத்துள்ளனர்.
கருணையாளன் அல்லாஹ்விடம் தங்களது கஷ்ட நஷ்டங்களை கூறி மன ஆறுதல் அடைவது எப்படி என்பதை மிக இலகுவாக கற்றுத் தந்துள்ளனர். ரிஸ்க் அளப்பவனிடம் தங்களுக்கான தேவைகளை கேட்டுப்பெறுதல் எப்படி என்பதை பாமரனுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகின்றனர்.
தங்களது ஆழ் மனதை உறுதிக் கொண்டிருக்கும் பெரும்பாவங்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமினிடம் அழுது மன்றாடி பாவமண்ணிப்பு கேட்பது எப்படி என்பதை கற்றுத் தந்துள்ளனர்.
மார்க்க ரீதியான எந்த கருத்து வேறுபாடுகளிலும் சிக்குவதில்லை. உம்மத்தில் பிளவுகளை உண்டாக்கும் கருத்துக்கள் எதையும் பரப்புவதில்லை. யாரையும் எதற்காகவும் விமர்சிப்பதில்லை. அரைகுறை மேட்டிமைத்தனத்தை யாரிடமும் காட்டுவதில்லை.யாருக்கும் காஃபிர் பத்வா கொடுப்பதில்லை.யாருடைய மானத்துக்கும் சேதம் ஏற்படுத்துவதில்லை.
1947 இல் தாருல் உலூம் தேவ்பந்த் உலமாக்களுடன் பிரிவினைக்கு எதிராக கைகோர்த்து நின்று தங்கள் உயிரை பணையம் வைத்து பல்லாயிரம் மனித உயிர்களை பாதுகாத்துள்ளனர்.
பிரிவினையின் போது எல்லையோர கிராம முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து விட்டதால் அங்கிருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் மாட்டுத் தொழுங்களாக பன்றி கொட்டகைகளாக மாற்றப்பட்டுவிட்டன.அப்படிப்பட்ட பல கிராம பள்ளிவாசல்களை கண்டறிந்து அவற்றை புதுப்பித்து அங்கே மீண்டும் நகரா அடித்து பாங்கு ஒலித்து ஐங்காலத் தொழுகை நடைபெறச் செய்துள்ளனர்.
அதேபோல எல்லையோர கிராமங்களில் கேட்பாரற்று விடப்பட்ட பல்லாயிரம் கோடிகள் மதிப்புடைய வஃக்ப் சொத்துக்களை கண்டறிந்து பாதுகாத்திடும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தப்லீக் ஜமாஅத்துடன் சித்தாந்த தொடர்புடைய அமைப்புகள் அறக்கட்டளைகள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மதரஸாக்களை நடத்தி வருகின்றனர்.
தப்லீக்கை உருவாக்கிய மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களும் அவர்களுக்குப் பிறகு இந்த ஜமாஅத்தை வழி நடத்தியவர்களும் அல்லாஹ்வின் நேசத்தையும் நெருக்கத்தையும் பெறுவதற்கு இதற்குமேல் என்ன செய்ய வேண்டும் என்பது சாதாரண மனித அறிவின் கேள்வியாக இருக்கிறது.
மனிதர்கள் முன்னெடுக்கும் எல்லா செயல்களிலும் காலப்போக்கில் சில குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும். அதற்கு எந்த ஒரு மனிதனும் ஜமாஅத்தும் அமைப்பும் விதிவிலக்கல்ல. அதையெல்லாம் அலசவேண்டிய அவசியமும் தகுதியும் எந்த மனிதனுக்கும் இல்லை.
இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமான காலம்தொட்டு இன்று வரை இவ்வளவு ஆழமான ஆன்மிகப் புரட்சிக்கு வித்திட்ட ஒரு ஜமாஅத் ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத்தை தவிர வேறு எதுவும் கிடையாது.
மெளலானா இலியாஸ் காந்தளவி அவர்களின் தூய்மையான எண்ணத்துக்கும் கவலைகளுக்கும் முஸ்லிம்களின் ஈமானை பாதுகாக்க அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கும் அல்லாஹ் வழங்கியுள்ள அங்கீகாரமும் கண்ணியமும் தான் தப்லீக் ஜமாஅத் இவ்வளவு பெரிய அமைப்பாக உலகம் முழுவதும் வியாபித்து உம்மத்துக்கு ஆன்மிகச் சேவையாற்றுகிறது.
இது கியாமத் நாள் வரை நிச்சயம் தொடரும்.
1440 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் ஆன்மிகப் புனரமைப்பின் மாபெரும் அடையாளம் தப்லீக் ஜமாஅத் என்றால் அது மிகையில்லை.
அதனால் தான், ஜனநாயக அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத ÇIA - MOSSAD போன்ற சதிகார உளவு நிறுவனங்களுக்கு தப்லீக் ஜமாஅத்தும் தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவும் பெரும் மண்டை குடைச்சலாக இருக்கிறது.
அல்லாஹ் இந்த ஜமாஅத்தை பெருந்திக் கொள்வானாக, அவர்களது குறைகளை மறைத்து மன்னித்து கண்ணியப்படுத்துவானாக...ஆமீன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.