புதுக்கோட்டையில் 2 பேரை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த 4 வாலிபர்கள் கைது மேலும் ஒருவரிடம் தீவிர விசாரணை
புதுக்கோட்டையில் 2 பேரை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொள்ளை சம்பவம்

புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் கடந்த 29-ந் தேதி இரவு தனது உறவினரான சீனிவாசனுடன் காரில் புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அண்டகுளம் விலக்கு அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க 2 பேரும் சென்றனர்.

அப்போது காட்டுப்பகுதியில் இருந்து ஒரு மர்ம கும்பல் வந்து செந்தில்குமார், சீனிவாசனை அரிவாளால் வெட்டியும், தாக்கியும், கைகளை கட்டிப்போட்டு 12 பவுன் நகை, ரூ.18 ஆயிரம், 2 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

4 வாலிபர்கள் கைது

இந்த நிலையில் கொள்ளை கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் செந்தில்குமாரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, புதுக்கோட்டையை சேர்ந்த தினேஷ் (வயது 21), விஜயபிரசாத் (18), யோகமணி (22), ரூபன் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, காலில் எலும்பு முறிவு

கைதானவர்களில் தினேஷ், விஜயபிரசாத் ஆகியோர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது அவர்களுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments