ராமநாதபுரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; வீட்டு வசதி வாரிய பொறியாளர் உள்பட 3 பேர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் வீட்டு வசதி வாரிய பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியத்தில் கடனுக்கு வீடு வாங்கி இருந்தார். அந்த கடனை அடைத்துவிட்ட நிலையில் பழனிசாமி இறந்துவிட்டார்.

பழனிசாமியின் மகன் பிரவீன்குமார். இவர் அந்த வீட்டை தனது தாயார் பெயருக்கு மாற்றுவதற்காக ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பெயர் மாற்றம் செய்து வழங்குவதற்கு வீட்டு வசதி வாரிய நிர்வாகப் பொறியாளர் பாண்டியராஜ் மற்றும் எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம்.

3 பேர் கைது

இது குறித்து பிரவீன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களின் அறிவுரைப்படி பிரவீன்குமார் நேற்று முன்தினம் லஞ்சப்பணத்தை கொண்டு சென்றபோது நிர்வாக பொறியாளர் பாண்டியராஜ், எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் அலுவலகத்தில் இல்லாததால் அவர்கள் கூறியபடி தற்காலிக பணியாளர் பாலாமணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாலாமணியை கையும் களவுமாக லஞ்ச பணத்துடன் பிடித்தனர்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டியராஜ், ரவிச்சந்திரன் மற்றும் பாலாமணி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments