புதுக்கோட்டை அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து ஒரு மாத பெண் குழந்தை சாவு சிறுவன் ஆசையாக தூக்கிய போது விபரீதம்
புதுக்கோட்டை அருகே சிறுவன் ஆசையாக தூக்கிய போது தண்ணீர் இருந்த வாளியில் தவறி விழுந்து ஒரு மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

வெல்டர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுபலட்சுமி (23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான சுபலட்சுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

நேற்று காலை சுபலட்சுமி தனது வீட்டின் அருகே பாய் விரித்து குழந்தையை படுக்க வைத்து விட்டு துணி துவைத்து கொண்டு இருந்தார். பின்னர் துணியை உலர்த்துவதற்காக வீட்டின் பின்புறம் சென்றபோது அருகே விளையாடி கொண்டிருந்த அவரது 2 வயது மகன் ஆசையாக தனது தங்கையை தூக்கி உள்ளான். அப்போது வாளியில் இருந்த தண்ணீருக்குள் குழந்தை கைத்தவறி விழுந்துள்ளது.

பெண் குழந்தை சாவு

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அலறினான். இதையடுத்து, சுபலட்சுமி ஓடி வந்து தண்ணீர் வாளியில் கிடந்த குழந்தையை தூக்கி பார்த்து போது மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனால் பதறிப்போன சுபலட்சுமி அப்பகுதி மக்களின் உதவியுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு மண்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் ஆசையாய் தூக்கியபோது கைத்தவறி தண்ணீர் இருந்த வாளியில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments