தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக, 03.02.2024 அன்று வரதட்சணை ஒழிப்பு மற்றும் அனாச்சார திருமணங்களுக்கு எதிராக மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக, 03.02.2024 அன்று வரதட்சணை ஒழிப்பு மற்றும் அனாச்சார திருமணங்களுக்கு எதிராக, TNTJ புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும் இரண்டு மாதகால பிரச்சாரத்தை முன்னிட்டு மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்கள்.

ஜெகதாப்பட்டினம் கிளைத் தலைவர் அப்பாஸ் கான், செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் அன்வர் அலி, துணைத் தலைவர் அய்யூப் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்புரையாக TNTJ பேச்சாளர்கள் மதுரை சேக் MISc மற்றும் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இறுதியாக கிளைத் தலைவர் அப்பாஸ் கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
 
இந்தக் கூட்டத்தில் கீழ்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

1.முஸ்லிம்களின் 450 ஆண்டுகால இறையில்லமான பாபர் மஸ்ஜிதில் சங்பரிவாரத்தினர் சட்ட விரோதமாக (1948ல்) சிலைகளை வைத்து பள்ளியை இழுத்து மூட வழிவகை செய்தார்கள். அதன் பிறகு 1992 ல் உலகமே பார்த்துக் கொண்டு இருக்க பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

நீதிமன்றம், அரசு இயந்திரம் என சட்டத்தின் அத்தனை கூறுகளும் வேடிக்கை பார்க்கவே இம்மாபெரும் அநியாயம் அரங்கேறியது.

மதவெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் பாசிச சக்திகள் பாபர் மஸ்ஜித் நிலத்தில் ராமர் கோவிலையும் கட்டி முடித்து விட்டார்கள்.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாசிச சக்திகள் அடுத்து காசி, மதுரா என்று ஆயிரக்கணக்கான பள்ளி வாசல்களை குறி வைக்க ஆரம்பித்து விட்டன.

தற்போது சங்பரிவாரத்தினர் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியை குறிவைத்து பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளனர்.

முகலாய பேரரசர் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துத்தான் கியான்வாபி மசூதியைக் கட்டியதாக சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் பிரச்சாரம் செய்து வெறுப்புணர்வை பரப்புகின்றனர்.

ஏற்கனவே கியான்வாபி மசூதியில் லிங்கம் இருப்பதாக கூறி அது, எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய, ‘கார்பன் டேட்டிங்’ சோதனை நடத்துவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தற்போது கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தெற்கு பாதாள அறையை கையகப்படுத்த வாரணாசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இன்று வழிபாடும் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.

வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரானதாகும்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991, (The Places Of Worship (Special Provisions) Act, 1991) சட்டத்தின்படி பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். 

சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் பெரும்பான்மை, மத நம்பிக்கை என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டால் நீதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இந்தியாவில் பல மசூதிகள் இலக்கு வைக்கப்படுகின்றன, அவை எவ்வளவு பழமையானவையாக இருந்தாலும் அவற்றை அபகரித்து தொடர்ச்சியாக அரசியல் செய்ய பாசிச சக்திகள் முயற்சித்து வருகின்றன.

அரசியல் சாசனத்தை தூக்கி நிறுத்தக் கடமைப்பட்ட நீதிமன்றம் சங்பரிவார கும்பல்களின் சதிச்செயல்களை ஆதரிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கியான்வாபி பள்ளி நிர்வாகம்  “அங்கு இதற்கு முன் எந்த பூஜையும் நடந்ததில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற கருத்து,'' என்று கூறியுள்ளார்.

கியான்வாபி மஸ்ஜிதின் அஞ்சுமன் இன்டெஜாமியா கமிட்டி இந்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களை முஸ்லிம்கள் நம்பிய போதும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

அதுபோல கியான்வாபி, ஷாகி ஈத்கா பள்ளிவாசல்கள் விஷயத்திலும் நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தை தராமல் சட்டத்தின்படி தீர்ப்பளிக்குமாறு இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


## வாக்கு சீட்டு முறையை அமல்படுத்துக ##

2.நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் மிண்ணனு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையின்மை வலுவாக அதிகரித்து வருகிறது, மிண்ணனு இயந்திரம் (EVM) நம்பகமானது இல்லை அதில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என பல அறிவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர், வாக்கு இயந்திரம் தொடர்பான வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன, தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் இதுவரை நிரூபிக்க வில்லை, மேலும் கணக்கில வராத பல EVM கள் பொதுஇடங்களில் நடமாடக்கூடிய சூழலையும் சென்ற காலங்களில் பார்க்க முடிந்தது அது குறித்த விசாரணைகளும் இன்னும் முடியவில்லை,

இப்பேர்பட்ட இச்சூழலில் பல வளர்ந்த நாடுகளினாலேயே கைவிடப்பட்ட வாக்கு இயந்திரம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது, ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வருவதாலும் , தங்கள் வாக்கு யாருக்கு பதியப்பட்டது என்பதை எவ்வித சந்தேகமுமின்றி உறுதி செய்யும் வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் செல்ல வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

## இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரியுங்கள் ##

3. ஆளும் திமுக அரசு தமிழக முஸ்லீம்களின் நெடுநாளையான கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மேலும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விகிதாச்சார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு அவர்கள் முன்னர் பெற்று வந்த இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடும் கொடுக்கப்படாமல் அநீதி இழைக்கப்படுகிறது , தமிழக முதல்வர் சமீபத்தில் சிறுபான்மையினருக்காக செய்த 15 அறிவிப்புகளில் இஸ்லாமியர்களுக்கு பயன் தரும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை, ,  இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவது  ஆளூம் திமுக அரசின் தார்மீக கடமை என்பதை இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம் , விரைவில் இவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

## இஸ்ரேலின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் ##

4.சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக சவுத் ஆப்ரிக்காவால் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது , காஸா மீது நடத்தப்படும் இனப்படுகொலை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், பொது மக்களுக்கு எவ்வித துன்பத்தை தரக்கூடாது என ICJ வின் பெருவாரியான நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர், இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கன்னத்தில் அறையும் தீர்ப்பாகும்,  இத்தீர்ப்பை ஆதிக்க சக்திகள் மதிக்குமா என்பது கேள்வியாக இருந்தாலும் தார்மீக ரீதியாக இஸ்ரேல் போன்ற ஆக்கிரமிப்பு சக்திகளின் தோல்வியையே இது காட்டுகிறது, இந்நேரத்தில் ஐநாவின் பாதுகாப்பு
கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சினை எழுப்பப்படும்போது அதற்கு பிறகான ராஜாங்க நடவடிக்கைகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து நாடுகளும் அணி
திரள வேண்டுமென கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

எண்ணை வளத்திற்காகவும் , பிராந்திய ஆளுமைக்காகவும் இஸ்ரேலுக்கு எல்லா வகையில் உதவும் அமெரிக்காவையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விரைந்து முயற்சிக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

## நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்க ##

5. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.   ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படுவது இல்லை. நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான கோப்பில் கையெழுத்திடாமல் ஆளுநர் உறங்கி கொண்டிருக்கிறார், நீட் உள்ளிட்ட ஏராளமான மசோதாக்களுக்கும் தமிழக மக்களின்மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம். சிறைவாசிகள் விடுதலையில் ஆக்கப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

6.புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வது வாடிக்கையாக உள்ளது. இது சம்மந்தமாக கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாளர் அவர்களிடமும், முதல்வர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடத்திலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆதலால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்தக் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். இதற்கும் செவிசாய்க்காமல் அலட்சியம் செய்தால் விரைவில் மாக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என்பதை  இக்கூட்டம் வாயிலாக சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

7.ஜெகதாப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனே அந்த பகுதிகளை தூய்மை செய்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பூங்கா அமைத்து தருமாறு கீழமஞ்சக்குடி ஊராட்சிமன்ற நிர்வாகத்தை இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

8. ஜெகதாப்பட்டினத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த 4 வருடங்களுக்கு முன்னால் கழிவுநீர் குழாய் பதிக்கவும், குடிநீர் குழாய் பதிக்கவும் நன்றாக இருந்த சாலைகளை உடைத்தார்கள். ஆனால் இதுநாள் வரை அந்த சாலைகளை சரிசெய்யவில்லை. மேலும் வீட்டுக்கு, வீடு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டும், இன்றுவரை குடிநீர் வந்தபாடில்லை. எனவே இந்த அவலநிலையை போக்கி புதிய சாலை அமைத்தும், குடிநீர் தேவையை நிறைவேற்றியும் தருமாறு சம்மந்தப்பட்ட கீழமஞ்சக்குடி ஊராட்சிமன்ற நிர்வாகத்தை இக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

9. ஜெகதாபட்டிணம் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சிதலமாகி மக்கள் பயன்பாடற்று இருக்கிறது, இரவு நேரத்தில் பயன்படுத்த மின்விளக்குகள் இல்லை, உயர்மின் கோபுரத்தில் விளக்குகள் உபயோகமில்லாமல் இருக்கிறது. எனவே, புதிதாக இருக்கைகள், விளக்குகள் அமைத்து தரும்படி கீழமஞ்சக்குடி ஊராட்சிமன்ற நிர்வாகத்தை இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments