அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் வர்த்தக சங்க பொதுக்குழுவில் தீர்மானம்




அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் அறந்தாங்கியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் தவசுமணி முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொது செயலாளர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு பேசுகையில், மதுரையில் மே மாதம் 5-ந் தேதி வணிகர்கள் சங்க மாநாடு நடைபெறுகிறது. இதில், புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் உள்ள வணிகர்கள் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும். மாநாடு வரும் நேரத்தில் தான் நாடாளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. எனவே ஓட்டுக்காக பணம் வாங்க மாட்டோம் என்று வியாபாரிகள் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் சான்றிதழ் பெறுவதில் தாமதம் மற்றும் குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், மின்சாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தீ விபத்தில் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு அரசின் உதவிகளை பெற்று தர அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் தனிக்குழு அமைப்பது என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, நலிவடைந்த வர்த்தகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஷேக் அப்துல்லா நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments