பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரம் ஜூன் மாதத்தில் திறக்க ஏற்பாடு




பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பஸ் நிலையத்தை வருகிற ஜூன் மாதம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பஸ் நிலையம்

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73 ஆயிரத்து 135 ஆகும். தற்போதைய பழைய பஸ் நிலையம் 27 பஸ் நிறுத்தங்களுடன் கூடிய "பி" கிளாஸ் பஸ் நிலையம் ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மைய பகுதியில் தற்போது பஸ் நிலையம் உள்ளது.

இதனால் அதிகமான பஸ்கள் நகருக்குள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அடிக்கல் நாட்டப்பட்டது

மேலும் தற்போதைய பஸ் நிலையம் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய இடவசதிகளுடன் இல்லை. இதையடுத்து பட்டுக்கோட்டை நரியம் பாளையம் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட "ஏ" வகுப்பு பஸ் நிலையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார், நகரசபை தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடைகள்- ஓட்டல்கள்

புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்துமிடங்கள், 120 கடைகள், 2 ஓட்டல்கள், 4 கழிவறைகள், 2 இருசக்கர வாகனம் நிறுத்துமிடங்கள், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பொருள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அலுவலகம், 3 காத்திருப்பு அறைகள் மற்றும் குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதத்தில் புதிய பஸ் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments