குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்: நண்டு கழிவு அவிக்கும் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




கோட்டைப்பட்டினம் அருகே குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நண்டு கழிவு அவிக்கும் தொழிற்சாலையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலை

கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மீனவர் காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு நண்டு கழிவுகளை அவித்து தீவனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், நண்டு கழிவுகளை அவிக்க சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் புகை உருவாகி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே நண்டு கழிவு அவிக்கும் தொழிற்சாலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தொழிற்சாலையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்தப்பகுதியில் புகை கிளம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் தங்களுடைய மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்காலிகமாக மூட உத்தரவு

இந்தநிலையில், நேற்று காலை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இ்ந்த தொழிற்சாலை முறைப்படி பதிவு செய்து நடத்தப்பட்டு வருகிறதா? என வருவாய் துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் துறை மூலம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நண்டு கழிவு அவிக்கும் தொழிற்சாலை முறைகேடாக செயல்பட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தாலோ அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments