கறம்பக்குடியில் வெறிநாய்கள் கடித்து 17 பேர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை
கறம்பக்குடியில் வெறிநாய்கள் கடித்து படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய்கள் தொல்லை

கறம்பக்குடியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக திரியும் நாய்கள் பாதசாரிகளை விரட்டி கடிக்கின்றன. திடீரென அங்கும் இங்கும் ஓடி திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் பெரும்பாலான நாய்கள் ஒரு வித நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மிகவும் அருவெறுக்கதக்க நிலையில் சுற்றுகின்றன.

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

17 பேர் படுகாயம்

இந்நிலையில் நேற்று மாலை கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் கூட்டமாக ஒடி சென்ற நாய்கள் குறைத்து சண்டையிட்டன. அப்போது வெறி நாய் ஒன்று அங்கும் இங்கும் பாய்ந்து சாலையில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள், நடந்து சென்றவர் என 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அலறி அடித்து கடைகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர்.

வெறிநாய் கடித்ததில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பார்த்திபன் (வயது 35), சரவணகுமார் (45), கவுரி (25), சூரியமூர்த்தி (70), வினோத்குமார் (30), மாரிமுத்து (44), லோகநாதன் (47), சுபாஷ் (15), அம்பிகா (31), சுரேஷ்குமார் (45), சின்னையன் (63), விஜயராமன் (68) ஆகிய 12 பேர் படுகாயமடைந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் கறம்பக்குடி தென்னகர் கடைவீதி பகுதியிலும் வெறிநாய்கள் கடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாய்கள் நடமாட்டத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments