கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளம் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்குகிறது




கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளம் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்குகிறது.

விசைப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இங்கிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல் மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் விசைப்படகுகளை மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்க போதுமான இட வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் விசைப்படகுகள் பலவற்றை கடலில் சற்று தள்ளி மீனவர்கள் நிறுத்தி வைக்கின்றனர்.

மேம்படுத்தும் பணி

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு நீண்ட காலமாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் ரூ.15 கோடி செலவிலும், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் ரூ.15 கோடி செலவிலும் மேம்படுத்தப்படும், ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அரசு விழாவில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர். இந்த நிலையில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடலில் மண் தோண்டுதல்

இந்த மேம்பாட்டு பணி என்பது அனைத்து விசைப்படகுகளையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கவும், மீன்களை பிடித்து கொண்டு வந்த பின் அவற்றை இறக்கி வைக்க வசதியாக அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. படகுகள் நிறுத்தி வைக்க வசதியாக கடலில் மண் ஆழமாக தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் மேற்கண்ட மீன்பிடி இறங்குதளங்கள் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

© 2024 All Rights
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments