திருச்சி கோட்டத்தில் உள்ள 15 ரெயில் நிலையங்களில் `அம்ரித் பாரத்' திட்டப்பணிகள் அடுத்த மாதம் முடியும் எம்.பி.க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல்




அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் உள்ள 15 ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அடுத்த மாதம் முடியும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.

எம்.பி.க்களுடன் ஆலோசனை

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே ரெயில்வே பயிற்சி மைய வளாகத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் தமிழக எம்.பி.க்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர் (திருச்சி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்), வைத்திலிங்கம் (புதுச்சேரி), கல்யாணசுந்தரம், செல்வராஜ் (நாகப்பட்டினம்), டாக்டர் ரவிக்குமார் (விழுப்புரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அனைவரையும் வரவேற்று, தெற்கு ரெயில்வேயில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், பயணிகளுக்கான வசதிகள் குறித்து பேசினார். திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்று வந்த முக்கிய அடிப்படை மேம்பாட்டு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

`அம்ரித் பாரத்’ திட்டம்

மேலும், அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கும்பகோணம் ரெயில்நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகள், `அம்ரித் பாரத்' ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், லால்குடி, சிதம்பரம், காரைக்கால், ஸ்ரீரங்கம், மன்னார்குடி, போளூர், திருப்பாதிரிபுலியூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் கண்டோன்மெண்ட், விருத்தாசலம் ஆகிய 15 ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதேபோல் புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்துதல், கூடுதல் ரெயில் நிறுத்தங்கள், புதிய ரெயில் பாதைகள் அமைத்தல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரெயில் சேவைகளை விரிவாக்கம் செய்தல், ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள், விழுப்புரம்-தஞ்சை இடையே இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி, ரெயில்வே மேம்பால பணிகள், ரெயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எம்.பி.க்கள் ஆலோசனை வழங்கியதோடு, தங்களது கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்கள். இதில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments