கோட்டைப்பட்டினம் : நான் செய்த தவறுக்கு இதுதான் பிராயச்சித்தம்.. மேடையிலேயே திமுக எம்பி அப்துல்லா செய்த நெகிழ்ச்சி செயல்




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் உள்ள பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில், எம்.பி நிதியில் இருந்து ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய தினம் பள்ளியின் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா பள்ளிக்குச் சென்றுள்ளார். அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி முடிந்ததும், அப்துல்லாவை மாணவிகள் மத்தியில் பேசும்படி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதனை ஏற்றுக்கொண்ட அவர், "கல்விதான், சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண்களாகிய உங்களுக்குச் சமூக விடுதலையை அளிக்கும்" என்று பேசினார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர், ’கடந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் 400 - க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவிகளுக்கு உங்கள் கைகளால் பரிசு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார். முகமலர்ச்சியோடு ஏற்றுக்கொண்ட எம்.எம்.அப்துல்லா, அந்த 15 மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் வழங்க வைத்திருந்த குக்கர், ஹாட் பாக்ஸ் போன்ற பொருள்களை பரிசாக வழங்கியிருக்கிறார்.

பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் மைக் பிடித்த எம்.எம். அப்துல்லா, "சிறிது நேரத்திற்கு முன்புதான் உங்களிடம், 'கல்விதான் பெண்ணடிமைத்தனத்தில் இருந்து உங்களை மீட்கும். அடுப்படியை மறந்து நல்ல கல்வியைப் பெற்று, நீங்களெல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வரவேண்டும்' என்று பேசினேன். ஆனால், என் கைகளாலேயே பரிசுப் பொருள்களாக சட்டி, பானைகளை வழங்க வைத்துவிட்டார்கள். அப்போதே, 'நான் இதுபோன்ற பரிசுகளை வழங்கமாட்டேன்' என்று மறுத்திருப்பேன். ஆனால், அது மேடை நாகரிகம் ஆகாது. அதனால், அந்தப் பரிசுப்பொருள்களை உங்களுக்கு வழங்கி, நானும் தவறுக்குத் துணையாக இருந்துவிட்டேன்.

அதனால், அதற்குப் பிராயச்சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1,000 பரிசு தருகிறேன். அதை 15 மாணவிகளும் மேடைக்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'’ என்று அறிவித்தார்.

அதன் பிறகு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது சொந்தப் பணத்தில் 15 மாணவிகளுக்கும் தலா ரூ.1,000 பரிசு வழங்கினார். எம்.பி-யின் இந்தச் செயல்பாடு ஆசிரியர்களை சிறிது சங்கடப்பட வைத்தாலும், அங்கிருந்த மாணவிகளை நெகிழ வைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments