இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்




இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக...

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இப்பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்டு வந்தனர்.

1 ஆண்டு சிறை

இந்நிலையில் தற்போது புதிதாக இலங்கையில் சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. அதில் மீனவர்கள் இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் முதல் முறை எச்சரிக்கை செய்து அனுப்பப்படும். 2-வது முறை பிடிபட்டால் படகு ஓட்டுனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், அதில் செல்லக்கூடிய நபர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் வழங்கப்படும். மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் விசைப்படகு அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலை நிறுத்தம்

இதனால் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் விசைப்படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments