அறந்தாங்கியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து விவசாயிகளுடன் சமாதான கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் அளவீடு பணிகள் தொடங்கப்பட்டது. அழியாநிலை முதல் கூத்தாடிவயல், ரெத்தினக்கோட்டை, வைரிவயல், பள்ளத்திவயல் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள், மக்களை அழைத்து தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அறந்தாங்கி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன் முன்னிலை வகித்தார். அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை கூறினர். அதற்கு அதிகாரிகள் மீண்டும் அளவீடு செய்து மாற்று வழிகளில் ஏற்பாடு செய்ய முடியுமா என மேலிடத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகள் தற்காலிகமாக சமரசம் அடைந்து அங்கிருந்து சென்றனர். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் சுபாஷினி மற்றும் துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments