திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு




திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

ரெயில்வே கேட்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையம் வழியாக சரக்கு ரெயில்கள், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையம் அருகே தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. தினமும் ரெயில்கள் செல்லும் போது அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

போக்குவரத்து நெரிசலை தடுக்க ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ெரயில்வே மேம்பாலம் கட்ட முதல் கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து மண்பரிசோதனை செய்யப்பட்டு, திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த திட்டத்திற்காக 2015-2016-ம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த பணியை விரைந்து தொடங்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முயற்சி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுத்து தமிழக அரசு ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிக்கான டெண்டர் விடப்பட்டது.

இந்த நிலையில் நீடாமங்கலம் ரெயில்வே மேம்பால பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீடாமங்கலத்துக்கு விரிவாக்க திட்டங்களை கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் மன்னார்குடி, நீடாமங்கலத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து அவை சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

தஞ்சையில் சிப்காட்

கடந்த கால ஆட்சியில் மன்னார்குடி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. தொழில்துறை மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு சிப்காட் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:-

தமிழத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 20 ெரயில்வே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.இதில் 5 பாலங்கள் தஞ்சை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில்தான் இந்த பாலங்கள் கட்டப்பட்டன. நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது குறித்து சட்டப்பேரவையில் டி.ஆர்.பி.ராஜா தான் அடிக்கடி கேள்வி கேட்பார்.

டெல்லி பயணம்

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆங்கிலத்தில் டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில் பேசுவார். ஜெயலலிதாவும் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பார். நான் ராஜாவுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவன். அவரது பேச்சை நான் உள்வாங்கி வைத்திருந்தேன்.

தி.மு.க. ஆட்சியில் நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் கோரிக்கையை மீண்டும் எழுப்பியபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு செய்து மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மத்திய அரசின் ஒப்புதலை பெற டெல்லிக்கு 3 முறை சென்றுள்ளோம்.

ரூ.170 கோடி ஒதுக்கீடு

நீடாமங்கலம் மேம்பாலம் பணிக்காக ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலைகள் இருந்தால் தான் வணிகம் நடைபெறும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிப்பது நெடுஞ்சாலைத்துறை தான். கடந்த கால ஆட்சியில் டெண்டர் விட்டு சென்றுவிட்டனர். விடுபட்ட பணிகளை எல்லாம் நாங்கள் செய்கிறோம்

இந்த பாலத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.170 கோடி. மூன்று கரங்களுடன் 30 மீட்டர் விட்டமுள்ள சுற்றுச்சந்திப்புடன் இந்த பாலம் அமைய உள்ளது.. பாலத்தின் மொத்த நீளம் 1,437 மீட்டர், அகலம் 12 மீட்டர். முதற்கட்டமாக சுற்றுச்சாலையுடன் கூடிய 1,110 மீட்டர் நீளம் உள்ள பாலப்பணிகள் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

2026-ம் ஆண்டு ஜனவரி

2-ம் கட்டப்பணியாக 2 ெரயில்வே பாலம், இதன் இணைப்பு பாலம் என மொத்தம் 327 மீட்டர் நீளமுள்ள பாலப்பணி மற்றும் 2 சுரங்கபாலப்பணிகள் உள்பட ரூ.90 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில்ரெயில்வே  பகுதிக்கான 2-ம் கட்ட பணிக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனைத்து பணிகளும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

விழாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் ரெயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளதால் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையம் வழியாக சரக்கு ரெயில்கள், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையம் அருகே தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. தினமும் ரெயில்கள் செல்லும் போது அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

போக்குவரத்து நெரிசலை தடுக்க ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தன. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது.

கனவு நிறைவேறியது

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற டிரைவர் சண்முகம் கூறுகையில், டெல்டா மாவட்டங்களின் முக்கிய பகுதியாக நீடாமங்கலம் திகழ்கிறது. நாகை, மன்னார்குடி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரெயில்கள் வந்து செல்லக்கூடிய இணைப்பு பகுதியாகவும், தஞ்சை, நாகை, கும்பகோணம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்லக்கூடிய இணைப்பு பகுதியாகவும் நீடாமங்கலம் திகழ்கிறது. ரெயில்வே கேட் மூடப்பட்டால் குறைந்தபட்சம் அரை மணிநேரமாக பஸ்சை நிறுத்திவிட்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 4 சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும். ரெயில்வே கேட் திறக்கப்பட்டாலும் அந்த பகுதியை கடந்து செல்ல 20 நிமிடங்களாவது ஆகும்.

அதுமட்டுமின்றி வரிசையாக பஸ்கள் செல்வதால் பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக பஸ்களை இயக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதிவேகமாக செல்லும்போது விபத்துகள் ஏற்படும். இதனால் டெல்டா மாவட்ட மக்களின் கனவு திட்டமாகவே நீடாமங்கலம் மேம்பாலம் இருந்து வந்தது. அந்த கனவு இப்போது தான் நிறைவேறி இருக்கிறது. இது மிகவும் வரபிரசாதமாகும். இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நான் 30 ஆண்டுகாலமாக டிரைவராக பணி புரிந்துள்ளேன். எனது பணிக்காலத்திலேயே இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா? என எதிர்பார்த்த நிலையில் ஓய்வு பெற்ற மறுமாதத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

வரவேற்கத்தக்கது

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் வையகளத்தூர் பி.கந்தசாமி கூறுகையில், ரெயில்கள் வரும் போது நீடாமங்கலம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் தஞ்சை-நாகை சாலையின் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் மணி கணக்கில் காத்துக்கிடக்கின்றன. இதை தடுக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தன. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ரெயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேம்பால திட்டத்துடன், சுரங்க பாதை திட்டத்தையும் துரிதமாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

விடிவே வராதா என ஏங்கி கொண்டிருந்தனர்

தஞ்சையை சேர்ந்த டாக்டர் ச.தழிழரசன் கூறுகையில், கரிகால் சோழன் பெயர் சொல்லும் நீராடுமங்கலம் என்ற பெயர் மருவி தற்போது நீடாமங்கலம் ஆனது. அரசியல், ஆன்மிகம், வணிகம் போன்ற துறைகளில் நீடாமங்கலம் தனி சிறப்புடன் விளங்கி வருகிறது. வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் பாய்ந்தோடும் பசுமை வளமிக்க ஊர் நீடாமங்கலம். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் இடையே முக்கிய சந்திப்பாக இருக்கும் பேரூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல ெரயில் வசதி இருந்தாலும், பொதுமக்கள் சாலை வழி பயணத்தையே அதிகளவில் மேற்கொள்கின்றனர். குறிப்பாக நெல் மூட்டைகளை சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் மற்றும் பொதுமக்களை சலிப்படைய செய்து வந்தது. குறிப்பாக ரெயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்படுவதால் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பித்துவிடும். இதற்கு விடிவே வராதா என பொதுமக்கள் ஏங்கி கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் பதில் தரும் விதமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டமாகவும், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொகுதியாகவும் விளங்கும் நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனை பேரூர் மக்கள் சார்பில் நன்றியுடன் வரவேற்கிறேன் என்றார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

நீடாமங்கலம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) செயலாளரும், வேன் டிரைவருமான தங்க.பாண்டியன் கூறுகையில், நீடாமங்கலத்தில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவ,மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் காலவிரயமும் ஏற்பட்டது. இதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ரெயில்வே மேம்பால பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சரியாக நேரத்திற்கு அனைவரும் செல்வார்கள். மேம்பால பணியை தாமதமாக தொடங்கினாலும், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் பி.ஜெகதீஸ் பாபு கூறுகையில், நீடாமங்கலம் உயர்மட்ட மேம்பால திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள் பயன்பெறக்கூடிய திட்டமாகும். நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேம்பாலம் அமைக்கப்பட்டால் இவை தவிர்க்கப்படும். இந்த திட்டத்தை பரிந்துரை செய்த தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி.ராஜாவுக்கும், நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் வையாளத்தூரை சேர்ந்த பி.கந்தசாமி கூறுகையில், நீண்ட கால கோரிக்கையான ரெயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை திட்டம்

தற்போது பணி தொடங்கப்பட்டுள்ளது இந்த போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். மேம்பாலம் பணியோடு சேர்த்து ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை திட்டத்தையும் துரிதமாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments