விரைவு ரயில் டிக்கெட் வைத்திருந்தால் மின்சார ரயிலில் பயணிக்கலாம் - உறுதி செய்தது ரயில்வே!
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களுக்கு விரைவு ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த நிலையங்கள் வரை மின்சார ரயிலில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்பதை  ரயில்வே துறை உறுதி செய்துள்ளது. 

பல்வேறு இடங்களில் இருந்தும் சென்னைக்கு இயக்கப்படும்  விரைவு ரயில்களில் பயணிப்போர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு  அதற்கு முந்தைய நிலையங்களில் இறங்கி மின்சார ரயில்களில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

அப்படிச் செல்வோர், அதே டிக்கெட்டில்  மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என, ரயில்வே விதி கூறுகிறது. ஆனால், விரைவு ரயில் டிக்கெட்டை ஏற்றுக் கொள்ளாமல், டிக்கெட் பரிசோதகர்கள் சிலர் அபராதம் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் ரயில்வே சார்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  'ரயில்வேயின், 2015ம் ஆண்டு உத்தரவுப்படி, விரைவு ரயில் முன்பதிவு அல்லது 'ஏசி' வகுப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணி, அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை, மின்சார ரயிலில் பயணிக்கலாம். ஆனால், டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அதே தடத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ரயில்வே விதிகள்படி, அந்த டிக்கெட் பரிசோதகர்கள் இதற்கு அபராதம் விதிப்பது சரியானது அல்ல. எனவே ரயில்வே அலுவலர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும்' என்று அவரது சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. மின்சார ரயிலில் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த விதியை சுட்டிக்காட்டி டிக்கெட் பரிசோதகர்களிடம் இருந்து அபராதம் இன்றி தப்பித்துக் கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments