கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி: தி.மு.க. அணியில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டி வேட்பாளராக நவாஸ்கனி எம்.பி. மீண்டும் களம் இறங்குகிறார்




தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக அக்கட்சி சார்பில் நவாஸ்கனி எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தி.மு.க. கூட்டணி தேர்தலை எதிர் கொள்ள அதிதீவிரமாக இயங்கி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று பேச்சு வார்த்தையை தி.மு.க. நடத்தியுள்ளது. இந்தநிலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான குழுவினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தலைமையிலான குழுவினரும், ம.தி.மு.க. அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையிலான குழுவினரும் அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று மாலை வந்தனர்.

ம.தி.மு.க. இழுபறி

இந்த நிலையில், ம.தி.மு.க.வினர் தங்களுக்கு 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளனர். இதனால், ம.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து ம.தி.மு.க. குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது, ம.தி.மு.க. அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘2 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளை கேட்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இனிமேல் நடக்கும். பேச்சுவார்த்தை தொடர்கிறது. இன்னும் விருப்பப்பட்டியல் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் கொடுப்போம்’’ என்றார்.

தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

அதே நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து 2 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கையெழுத்திட்டார்.

இதே போன்று, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து 2 கட்சிகளை சேர்ந்த கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரும் வெளியே வந்தனர்.

நவாஸ்கனி போட்டி

அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதே தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். நாங்கள் எங்கள் ஏணிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராமநாதபுரம் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற நவாஸ்கனியே போட்டியிட வேண்டும் என்று ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் சார்பாகவும், குறிப்பாக தி.மு.க. சார்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. அதையே நாங்களும் முடிவு செய்து ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனியையே வேட்பாளராக அறிவிக்க உள்ளோம். விரைவில் திருச்சியில் பொதுக்குழுவை கூட்டி முறைப்படி அறிவிப்போம்.

மேலும் ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்கி தந்தால் நன்றாக இருக்கும் என்றும் கேட்டோம். தற்போது மாநிலங்களவை பற்றி எந்த கட்சிக்கும் எந்த முடிவும் சொல்லவில்லை. உங்களுக்கு ஆக வேண்டியது எதுவோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உறுதிமொழி அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

உதயசூரியன் சின்னத்தில்...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். விரைவில் எங்களுடைய பணிகளை தொகுதியில் தொடங்குவோம். எல்லாரும் எதிர்ப்பாப்பது போல எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 2019-ம் ஆண்டு போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். எங்களுடைய செயற்குழு, ஆட்சிமன்ற குழு கூடி வேட்பாளரை விரைவில் தேர்வு செய்வோம். எங்களுடைய எம்.பி. சின்ராஜ் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். எனவே, புதுமுகத்திற்கு வாய்ப்புள்ளது’’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments