டிரைவர் இல்லாமல் 70 கி.மீ. தூரம் ஓடிய சரக்கு ரெயில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்




காஷ்மீரின் ஜம்மு நகரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு 53 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. டிரைவர் மாறுவதற்காக காஷ்மீரின் கதுவா ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ரெயில் டிரைவரும், உதவியாளரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதே சமயம் அவர்கள் ‘ஹேண்ட் பிரேக்’ போடாமல் கீழே இறங்கி சென்றனர்.

சற்று இறக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் டிரைவர்கள் இறங்கியதும் ரெயில் மெல்ல நகர தொடங்கியது. பின்னர் ரெயில் வேகமெடுத்து ஓட தொடங்கியது.

இதனால் ரெயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரெயில் செல்லும் வழித்தடத்தில் இருந்த அனைத்து ரெயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. தண்டவாளத்தை யாரும் கடக்காத வண்ணம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

அதே வேளையில் சரக்கு ரெயில் நிறுத்துவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்தன. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் பதற்றமும், பீதியும் அதிகரித்தது.

ரெயில் பல ரெயில் நிலையங்களை கடந்து, 70 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் ஓடியது. பின்னர் பஞ்சாப் மாநிலத்தின் உஞ்சி பாசி ரெயில் நிலையம் அருகே மணல் மூட்டைகள் மற்றும் மர தடுப்புகளை பயன்படுத்தி ரெயில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறிய ரெயில்வே அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதனிடையே டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் அதிவேகத்தில் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments