புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகையில் பணம் கையாடல் அதிகாரிகள் விசாரணை




புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வினியோகத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியோர் உதவித்தொகை

தமிழக அரசின் திட்டங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதியவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களது வாழ்க்கைக்கு இந்த உதவித்தொகை உதவியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். இதில் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கு எண்ணிற்கு அரசின் பணம் மாதம், மாதம் அதிக தொகையில் சென்றது தெரியவந்தது. இதில் அந்த வங்கி கணக்கு எண் புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியருக்குரியது என தெரிந்தது.

பணம் கையாடல்

இந்த உதவித்தொகை வழங்கும் பிரிவில் பணியாற்றிய அவர், பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு சென்ற பணம், ஆதார் எண் இணைக்கப்படாதது உள்பட பல்வேறு காரணங்களால் திரும்பி வந்தபோது, அதனை தனது வங்கி கணக்கு மாற்றி கையாடல் செய்தது தெரியவந்தது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் அவர் கையாடல் செய்திருக்கிறார்.

இதையடுத்து துறைரீதியாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசில் அதிகாரிகள் யாரும் புகார் கொடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட பிரிவை சேர்ந்த அதிகாரிகளிடம் அந்த பணத்தை வசூல் செய்யும் படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து கலெக்டர் அலுவலக வட்டார அதிகாரிகள் கூறுகையில், "இந்த கையாடல் விவகாரம் தொடர்பாக தாசில்தார் அளவில் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்பு தான் முழுவிவரம் தெரியவரும்'' என்றனர்.

முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியவர்கள் பலர் மனு அளித்து வருகிற நிலையில், இத்திட்டத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் இதுபோல வேறெங்கும் கையாடல் நடந்துள்ளதா? எனவும் விசாரிக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments