ஆலங்குடி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




ஆலங்குடி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சியில் எம். ராசியமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பில் சர்வோதயா விவசாய பண்ணைக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் தயாராக உள்ளது. ஆனால் இந்த சாலை பணி 2 மாதங்களாக முடிவடையாமல் உள்ளது. மேலும் இந்த சாலையில் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதால் அந்த நபர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சென்று உள்ளார். இதனால் இந்த சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

சாலை மறியல்

மேலும் இந்த சாலைக்கு பட்டா வழங்கிய அலுவலர்களை கண்டித்தும், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை முழுமையாக நிறைவு செய்ய வலியுறுத்தியும் எம்.ராசியமங்கலம் பொதுமக்கள் பாச்சிக்கோட்டை ஊராட்சி அலுவலகம் எதிரில் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், உடனடியாக சாலை பணியும் தொடங்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments