நடப்பாண்டு 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்




பள்ளிகளில் நடப்பாண்டு 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியிலேயே புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.

நேரடி பயனாளர் பரிவர்த்தனை

முதல்-அமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வகையில் ‘நேரடி பயனாளர் பரிவர்த்தனை' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.


மாணவர்களுக்கு வங்கி கணக்கு

இப்பணியை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

பெற்றோர்களுக்கு சிரமம் குறைவு

பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments