கீரமங்கலத்தில் 91 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்




கீரமங்கலத்தில் 91 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டிடத்தை இடித்து விடாமல் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழமையான கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம் உருவாகும் முன்பே ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த கீரமங்கலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருந்தது. இதனால் கீரமங்கலத்தை மையமாக வைத்து பள்ளிக் கூடம் வேண்டும் என்று 1933-ம் ஆண்டு அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தால் முதல்தர தொடக்கப்பள்ளியை தொடங்கியுள்ளனர். இதற்காக நிலத்தை கீரமங்கலத்தை சேர்ந்த நிலச்சுவான்தார்களே தானமாக வழங்கியுள்ளனர்.

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை, அலுவலகம், ஆசிரியர்கள் ஓய்வறைகள் அடங்கிய கட்டிடம் ஐ என்ற எழுத்து வடிவில் கட்டப்பட்டிருந்தது. பிறகு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும், தரம் உயர்த்தப்பட்ட போதும் புதிய கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்டப்பட்டது. ஆனால் உறுதியாக இருந்த பழைய அலுவலக கட்டிடம் தொடர்ந்து பராமரிப்பிலும் பயன்பாட்டிலும் இருந்து வந்தது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கீரமங்கலம் சுற்றுவட்டாரங்களில் சுமார் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களில் இருந்தும் இந்த பள்ளிக்கு வந்து படித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 70 வயதுடைய முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கு வந்த முன்னாள் மாணவர்கள் இந்த கட்டிடத்தில் இருந்து தான் ஆசிரியர்கள் எங்களை உருவாக்கினார்கள்.

எங்களுக்கு வயதானாலும் இந்த கட்டிடம் இன்னும் கம்பீரமாக நிற்கிறது என்று வியந்தனர். இதுவரை இந்தப் பள்ளியில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வெளியில் சென்றுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான மருத்துவர், ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக உள்ளனர்.

இடிக்க வேண்டாம்

இந்த நிலையில் தான் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் ஒரு மரம் கட்டிடம் மீது சாய்ந்து மேற்கூரையில் இருந்த ஓடுகள் சேதமடைந்தது. அதன் பிறகு கட்டிடத்தை சீரமைக்காததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த பழமையான கட்டிடம் பழுதடைந்துள்ளதாக கூறி அதனை இடித்து அகற்றுவதைவிட 91 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து அந்த கட்டிடத்தை நவீன நூலகமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments