பவுனுக்கு ரூ.10 ஆயிரம்; திருப்பி தருகிறோம் என 76 பேரிடம் ஆசைவார்த்தை: 600 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.4 கோடி மோசடி; தம்பதி கைது ராமநாதபுரத்தில் பரபரப்பு




திருப்பி தருவதுடன் பவுனுக்கு ரூ.10 ஆயிரம் உடனடியாக தருகிறோம் என ஆசைவார்த்தை கூறி 76 பேரிடம் 600 பவுன் நகைகளை வசூலித்து, அவற்றை அடகு வைத்து ரூ.4 கோடி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையை அடுத்த இதம்பாடல் அருகே பனையடியேந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர், வீரப்ப மொய்லி (வயது 32). இவருடைய மனைவி விஜயசாந்தி (28). இவர் திருப்பூரில் அறக்கட்டளை ஒன்றில் முக்கிய நிர்வாகியாக இருப்பதாகவும் அதன் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இவர் தனது கணவர் வீரப்ப மொய்லியுடன் சேர்ந்து, மேற்கண்ட அறக்கட்டளைக்கு கொரோனா காலத்துக்கு பின்பு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைப்பதில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், இதற்காக நிறுவனத்திற்கு நிதி உதவி கிடைக்கும் வகையில் கடன் வாங்கி கொடுக்கும் நபர்களுக்கு பணமும் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் தொகுப்பும், பண்டிகை காலங்களுக்கு செலவுக்கு பணமும் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

நகைகளை அடகு வைத்து...

இவர்களின் பேச்சை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கொடுத்துள்ளனர். அந்த நகைகளை பெற்ற கணவன்-மனைவி இருவரும் பல்வேறு நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் தொகைக்கு ஏற்ப நகை கொடுத்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணத்தை கொடுத்துள்ளனர். குறிப்பாக பவுனுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் உடனடியாக விஜயசாந்தி, வீரப்பமொய்லி தம்பதி மற்றும் விஜயசாந்தியின் தந்தை முருகேசன், தாய் ஆறுமுகம், அக்காள் காளீஸ்வரி, தம்பி செந்தில் முருகன் ஆகியோர் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வந்துள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி பனையடியேந்தல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 76 பேர் சுமார் 600 பவுன் நகைகளை கொடுத்துள்ளனர்.

இந்த நகைகளை பெற்றுக் கொண்ட கணவன்-மனைவி உள்ளிட்டோர், கிராமத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் கடன் பெற்று மேற்படி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

கணவன்-மனைவி கைது

இதனால் நகைக்கடன் கொடுத்த நிதிநிறுவனத்தினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கணவன்- மனைவி உள்ளிட்டோரிடம் சென்று பணம் கேட்டபோது பணத்தை கட்டாமல் ரூ.4 கோடி வரை மோசடி செய்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து பனையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி இருளாயி உள்பட ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தனர். அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணகி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தி, அவரது கணவர் வீரப்ப மொய்லி ஆகிய இருவரையும் சென்னையில் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விஜயசாந்தியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீதிபதி அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி விடுவித்தார். வீரப்ப மொய்லி ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விஜயசாந்தியின் தந்தை, தாய் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

கலெக்டரிடம் மனு

இதற்கிடையே இந்த மோசடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பனையடியேந்தல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் கலெக்டரிடம் மோசடி செய்தவர்களிடம் இருந்து தங்கள் நகைகளை திரும்ப பெற்றுத் தருமாறு கோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments