மின்கம்பங்கள் ஏற்றி வந்தது பாம்பன் புதிய பாலத்தில் 2 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்வையிட்டனர்




பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தில் மின்கம்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக 2 பெட்டிகளுடன் மின்கம்பங்கள் ஏற்றி வந்த சரக்கு ரெயிலை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்வையிட்டனர்.

புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய பாலத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முழுமையாக தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே உள்ள பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தியும், அதன் மீது தண்டவாளங்கள் பொருத்தும் பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. மையப்பகுதியில் அமைய உள்ள சுமார் 700 டன் எடை கொண்ட தூக்குப்பாலத்தை பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து நகரும் கிரேன் மூலம் நகர்த்தும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தின் ஓரப்பகுதிகளில், நடைபாதைகளில் மின் கம்பங்கள் பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக என்ஜினுடன் சில பெட்டிகள் கொண்ட ரெயிலில் மின் கம்பங்கள் மண்டபம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.

மின்கம்பங்கள் அமைக்கும் பணி

மண்டபத்தில் இருந்து தொடங்கும் புதிய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து மின்கம்பங்களுடன் அந்த சரக்கு ரெயிலானது பின்னோக்கியப்படியே இயக்கப்பட்டது.. தொடர்ந்து பாலத்தின் ஒவ்வொரு இடத்திலும் சரக்கு ரெயில் மீது அமைக்கப்பட்டுள்ள கிரேன் மூலம் மின் கம்பங்கள் இறக்கப்பட்டு பாலத்தில் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் 2 கிலோமீட்டர் நீளமுடைய புதிய ரெயில் பாலத்தில் மொத்தம் 100 மின்கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் 76 மின்கம்பங்கள் அமையவுள்ளன.

இதில் 60 மின்கம்பங்கள் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. மீதமுள்ள 16 மின்கம்பங்கள் அமைக்கும் பணி இன்றுடன் முடிவடைந்து விடும். மற்ற மின்கம்பங்கள் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்ட பின்பு பொருத்தப்படும். ஒவ்வொரு மின்கம்பமும் 20 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே புதிய ரெயில் பாலத்தில் சரக்கு ரெயில் முன்னும் பின்னும் சென்றதை பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments