தேர்தல் நடத்தை விதிகள் அமல்: திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து




தேர்தல் நடத்தை விதியின் காரணமாக திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டியது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறையின் படி திருமண மண்டபங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண மண்டபங்கள், தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பரிசு பொருட்கள்

நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்க கூடாது. அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ வினியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கும், போலீசாருக்கும் தெரிவித்திடல் வேண்டும்.

தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக வினியோக்கப்பட வாய்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

பிரியாணிக்கு அனுமதிக்க கூடாது

திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை. தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு மொய் என்ற பெயரில் பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக வினியோக்கப்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறான இனங்கள் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

குற்றவியல் நடவடிக்கை

வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன்பின்னர் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை கலெக்டர் மெர்சிரம்யா பார்வையிட்டார். முன்னதாக கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாசலம், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments