தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிறவி இதய குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு முதன்முறையாக நவீன சிகிச்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தகவல்




தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பிறவி இதய குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறினார்

பிறவி இதய குறைபாடு

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கேத்லேப் (இருதய உட்செலுத்தி எதிரியக்க ஆய்வுக்கூடம்) கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 8,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்பிற்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் செய்யும் சிகிச்சை 1,402 பேருக்கும், 4 மணி நேரத்திற்குள் செய்யும் சிகிச்சை 2,114 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இதய துடிப்பு குறைவான நோயாளிகள் 41 பேருக்கு நிரந்தர இதய துடிப்பு கருவியும், 143 பேருக்கு தற்காலிக இதய துடிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பிறவி குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு இதயத்தில் நிலைத்த ரத்த நாளம் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை இன்றி இதய உட்செலுத்தி சிகிச்சை முறையில் காயில் வைத்து இதய குறைபாட்டை சரி செய்யும் சிகிச்சை முதன்முறையாக அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 குழந்தைகளும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

பின்னர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன்முதலாக பிறவியிலேயே குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்வதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிறவி இதய குறைபாடு இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படும். இதனை வைத்து அறிந்து கொள்ளலாம். இதற்காக சுகாதாரத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பிறவி குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிவதற்கான குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் ஆய்வு செய்து, குறைபாடு இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.

பிரசவ இறப்பு குறைந்தது

அவ்வாறு இந்த குழந்தைகளுக்கு இதய துறை தலைவர் டாக்டர் ஜெய்சங்கர், தாய் திட்ட டாக்டர் மருதுதுறை மற்றும் மயக்கவில் துறை, குழந்தைகள் நல துறை தலைவர் ஆகியோர் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தஞ்சை மாவட்டத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள், சிசு இறப்பு போன்றவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments