சுட்டெரிக்கும் வெயில்; வறண்ட நீர் நிலைகள்: அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் இருந்து வெளியேறும் பறவைகள்




சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும், நீர் நிலைகள் வறண்டு விட்டதாலும் அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் இருந்து பறவைகள் வெளியேறி வருகின்றன.

அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைப்பகுதியை யொட்டி அலையாத்திக்காடு அமைந்துள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கடற்கரையோர மக்களை காக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் அலையாத்திக்காட்டுக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு.

அலையாத்தி மரங்களின் உதிர்ந்த இலைகள் மக்கி கடலில் விழுந்து இறால் மற்றும் பிற மீன்களுக்கு உணவாக பயன்படுகிறது. மீன் இனப்பெருக்கம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக அலையாத்தி மரங்கள் உள்ளன.

இயற்கையின் பொக்கிஷம்

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் அடர்ந்து வளர்ந்து காணப்படும் அலையாத்திக்காடு இயற்கையை ரசிப்பவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்.

அலையாத்திக்காட்டில் காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, நரி, கொடிய விஷப்பாம்புகள் வசிக்கின்றன. வன விலங்குகள், அரிய வகை தாவரங்கள், அரிய வகை பறவைகள் என இயற்கையின் பொக்கிஷகமாக திகழ்கிறது அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு. இங்கு கடல் காகங்களை அதிகமாக காணலாம்.

வெளிநாட்டு பறவைகள்

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வந்து விட்டால் அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டை தேடி வெளிநாட்டு பறவைகள் சிறகடித்து பறந்து வருகின்றன. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் நேரத்தில் இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பூநாரை, கூளக்கடா, செங்கால்நாரை, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, வெண்கொக்கு, கொளத்துக்கொக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விதவிதமான பறவைகள் அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டை சுற்றி சிறகடிப்பதை கண்குளிர ரசிக்கலாம்.

பருவ மழையால் அலையாத்திக்காட்டில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அங்கு நிலவும் குளிர்ந்த சூழல் பறவைகளுக்கு ஏற்றதாக உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

வறண்ட நீர் நிலைகள்

கோடைகாலம் தொடங்கும்போது அதாவது மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கும். கடந்த ஆண்டு கோடை காலத்தில் இடையிடையே மழை பெய்ததால் அதிராம்பட்டினம் பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் இருந்தது. அலையாத்திக்காட்டில் உள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பறவைகள் வரத்து அதிகமாக இருந்தது.

வழக்கமாக அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் கோடை காலம் என்றாலும் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது கோடை தொடங்கும் நேரத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. அலையாத்திக்காட்டில் உள்ள நீர் நிலைகள் தற்போதே வறண்டு விட்டன.

வெளியேறும் பறவைகள்

வெயில் சுட்டெரிப்பதாலும், நீர் நிலைகள் வறண்டு விட்டதாலும் அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் தஞ்சம் புகுந்த பறவைகள் தற்போதே வெளியேற தொடங்கி விட்டன.

ஏரி, குளங்கள் மற்றும் உப்பளங்கள் என எங்கு பார்த்தாலும் பறவைகள் துள்ளிக்குதித்து விளையாடும் அந்த ரம்மியமான காட்சிகளை தற்போது பார்க்கமுடிவதில்லை என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். காட்டில் வசிக்கும் விலங்குகள் பருகுவதற்கு தண்ணீரில்லாததால் காடுகளை விட்டு வெளியேறி வயல்வெளியை நாடிச்செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments