வாக்குச்சாவடியில் ‘செல்பி’க்கு தடை வாக்குப்பதிவில் தவறான குற்றச்சாட்டை கூறினால் சிறை




வாக்குச்சாவடியில் செல்பிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவில் தவறான குற்றச்சாட்டை கூறினால் சிறை என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

செல்பிக்கு தடை

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் பேசியதாவது:-

வாக்குச்சாவடியில் செல்பிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்த பின் அதனை செல்பி எடுக்க அனுமதிக்கக்கூடாது. இதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

வி.வி.பேட் எந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யும்போது அருகில் உள்ள வி.வி.பேட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் துண்டு சீட்டு விழும்.

இந்த நிலையில் வாக்காளர் ஒருவர் தான் ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததில், வி.வி.பேட் எந்திரத்தில் வேறு சின்னத்தின் சீட்டு விழுந்ததாக தெரிவித்தால், உடனடியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்கு தான், வி.வி.பேட் எந்திரத்தில் சீட்டு விழும். இதில் தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பதை வாக்காளருக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தும், அந்த வாக்காளர் ஏற்க மறுத்தால் சோதனை ஓட்டு முறையை நடத்த வேண்டும்.

6 மாதம் சிறை

வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், அந்த வாக்காளரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மீண்டும் அதே சின்னத்திற்கு வாக்களிக்க கூற வேண்டும். அவ்வாறு அவர் அந்த பொத்தானை அழுத்தியதும், வி.வி.பேட் எந்திரத்தில் அதே சின்னத்தின் சீட்டு வந்து விழுந்தால் எதுவும் குளறுபடி இல்லை என்பது நிரூபணமாகி விடும்.

அதேநேரத்தில் வாக்குப்பதிவில் தவறான குற்றச்சாட்டை கூறியதற்காக அந்த வாக்காளருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையத்தின் விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை வாக்காளரிடம் முதலில் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு அவர் சம்மதித்த பின்பு தான் இந்த சோதனை ஓட்டு முறையை நடத்த வேண்டும்.

தேர்தல் அதிகாரி முடிவு

அதேநேரத்தில் வாக்காளர் தெரிவித்தப்படி வி.வி.பேட் எந்திரத்தில் சீட்டு மாறி வந்தால் உயர் அதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி அடுத்த முடிவு எடுப்பார்கள். வாக்குப்பதிவு நேரத்தில் சிலர் வேண்டுமென்ற தவறான குற்றச்சாட்டை கூறலாம். அதனால் அவர்களுக்கு இந்த விதிமுறையை முதலில் தெரிவித்த பின்பு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எதுவாயினும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்பு தான் வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments