சிவகங்கை பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சில் திடீர் தீ பயணிகள் அலறி அடித்து ஓட்டம்




சிவகங்கை பஸ் நிலையத்தில் அரசு பஸ்சில் திடீரென்று தீப்பற்றியது. பஸ்சில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அரசு பஸ்சில் திடீர் தீ

மதுரையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலையில் நாட்டரசன்கோட்டைக்கு புறப்பட்டது. அந்த பஸ் மதியம் 12 மணிக்கு சிவகங்கை பஸ் நிலையம் வந்தது. பஸ்சை டிரைவர் கிறிஸ்துதாஸ் ஓட்டி வந்தார். பஸ்நிலையத்திற்கு வந்து நின்ற உடன், அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.சிறிது நேரத்தில் பஸ் என்ஜினில் இருந்து அதிக சத்தத்துடன் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

பயணிகள் ஓட்டம்

இதை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். சிறிது நேரத்தில் பஸ் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பயணிகள் பீதிக்குள்ளானார்கள். சாலையோர நடைபாதை கடைகளும் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பஸ்சில் லேசான சேதம் ஏற்பட்டது.

இதன்பிறகு அந்த பஸ்சில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் நாட்டரசன்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பஸ்சில் திடீரென்று தீ பிடித்ததற்கு என்ன காரணம்? என தீயணைப்பு துறையினரும், போக்குவரத்து துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments