தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 190 கம்பெனி துணை ராணுவம்: வயது முதிர்ந்தோர் தபால் ஓட்டு போடுவதற்கு 7 லட்சம் படிவங்கள் வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்




வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்காக 7 லட்சம் படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சின்னம்

ம.தி.மு.க., புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு வந்ததும் அதுபற்றிய விவரங்களை தெரிவிப்போம். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்குங்கள் என்று எங்களிடம் எந்த கடிதமும் தரப்படவில்லை. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சை சின்னம் கேட்டு கடிதம் கொடுக்கவில்லை.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக இதுவரை 17 ஆயிரத்து 800 புகார்கள் வாக்காளர்களிடம் இருந்து வந்துள்ளன. அனைத்து கட்சி கூட்டத்தில், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று கேட்டனர். ஏற்கனவே 50 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். இணையத்தொடர்பு கிடைக்காத மற்ற வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண் பார்வையாளர் கண்காணிப்பு அல்லது வீடியோ பதிவு கண்டிப்பாக இருக்கும்.

தபால் ஓட்டு படிவங்கள்

தபால் ஓட்டுக்காக 12-டி படிவத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கும் பணி 25-ந்தேதியுடன் (நேற்று) நிறைவு பெற்றது. வாக்குப்பதிவுக்கு முந்தைய ஏதாவது ஒரு நாளில் அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறப்படும். கடந்த தேர்தலைவிட அதிகம் பேர் இந்த படிவத்தை பெற்றுள்ளனர். 7 லட்சம் பேர் படிவம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முழு விவரம் பின்னர் கிடைக்கும்.

புதிய விண்ணப்பங்கள்

மார்ச் 17-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 6.12 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 5.33 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 43 ஆயிரத்து 631 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 35 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பெயர் நீக்கம் செய்ய 5.35 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 4.86 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. 26 ஆயிரத்து 405 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 22 ஆயிரத்து 806 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

முகவரி மாற்றம் செய்ய 5.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதில் 4.90 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 ஆயிரத்து 803 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 29 ஆயிரத்து 824 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தத்தில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றங்கள் ஆகியவற்றுக்காக மொத்தம் 17.28 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 15.10 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. 5.57 சதவீத மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளது.

165 கம்பெனி வருகை

25-ந்தேதி (நேற்று) பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் செயல்பாடுகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஏற்கனவே கண்காணித்து வருகின்றனர். இப்போது கூடுதலாக தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர், 2 தொகுதிக்கு ஒரு போலீஸ் பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் 26-ந்தேதி முதல் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவார்கள்.

தமிழகத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்களை இங்கு அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. அவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தத்தில் 190 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.

சுற்றுலா வந்தவர்களிடம் ரூ.68 ஆயிரம் பறிப்பு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியதாக பா.ஜ.க. சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் உடனடியாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த விஷயங்களை அறிக்கையாக அளிக்கும்படி துாத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்டியில் ஒரு பஞ்சாபி தம்பதியினரிடம் ரூ.68 ஆயிரம் தொகையை பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள், சுற்றுலா செலவுக்காக வைத்திருந்த பணம் மொத்தமும் பிடிபட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம் என்பதுதான் தேர்தல் நடத்தை விதி. அந்த வகையில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து செல்லும்போது ஒவ்வொருவரும் தங்களிடம் ரூ.50 ஆயிரம் வைத்திருப்பதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘‘திறன் மிக்க வாக்காளராகுங்கள்’’ என்ற கையேட்டை சத்யபிரத சாகு வெளியிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments