புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21,988 மாணவர்கள் எழுதினர் 736 பேர் எழுத வரவில்லை




எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை புதுக்கோட்டையில் 21,988 மாணவ, மாணவிகள் எழுதினர். 736 பேர் தேர்வு எழுதவரவில்லை.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தமிழ்பாடத்தேர்வுடன் தொடங்கியது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6,300 மாணவர்களும், 6,429 மாணவிகளும் என 12,729 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 4,962 மாணவர்களும், 4,871 மாணவிகளும் என 9,833 மாணவ, மாணவிகளும் நுழைவுச்சீட்டு பெற்றிருந்தனர்.

இதேபோல் தனித்தேர்வர்களாக 166 பேரும் என மொத்தம் 22,728 பேருக்கு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக தேர்வு மையங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. மாணவ-மாணவிகள் வீட்டில் வழிபாடு நடத்தி தேர்வு மையங்களுக்கு வந்தனர். மேலும் மாணவ-மாணவிகளை வீட்டில் அவர்களது பெற்றோர் வாழ்த்தி வழியனுப்பினர்.

சிலரது பெற்றோர் நேரில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து விட்டதை காண முடிந்தது. தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்தினர்.

21,988 பேர் எழுதினர்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது முதல் 15 நிமிடங்கள் விடைத்தாள்கள் நிரப்பவும், வினாத்தாள்கள் படிக்கவும் கொடுக்கப்பட்டிருந்தன. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,765 மாணவர்களும், 11,077 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்களாக 147 பேர் என மொத்தம் 21,988 பேர் தேர்வு எழுதினர்.

இத்தேர்விற்கு 495 மாணவர்களும், 222 மாணவிகளும், 19 தனித்தேர்வர்களும் என மொத்தம் 736 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பறக்கும்படையினர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

கலெக்டர் ஆய்வு

இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாடவாரியாக தேர்வு நடைபெற உள்ளது.

ஆங்கில பாடத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதியுடன் முடிவடைகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments