திருமயம், அறந்தாங்கியில் வாகன சோதனை: ரூ.3¼ லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் மளிகை, மீன் விற்ற காசை பறிமுதல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்




திருமயம், அறந்தாங்கியில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.3¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மளிகை, மீன் விற்ற காசை பறிமுதல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மேலும்,உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அன்னவாசல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக திருமயம் மகமாயிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்து 180 எடுத்து சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், எனவே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் எடுத்துக்கொண்டு திருமயம் சென்றதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் அதிகாரிகள் திருமயம் தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர்.

மீன் விற்ற காசு...

இதேபோல் திருமயம் உதவி கூட்டுறவு அலுவலர் பூங்காவனம் தலைமையிலான அதிகாரிகள் திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சேலத்தில் இருந்து மீன்களை ஏற்றி வந்து திருப்பத்தூர் பகுதியில் விற்பனை செய்துவிட்டு பணத்துடன் சேலம் செல்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை திருமயம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மளிகை பொருட்கள்...

அறந்தாங்கி தாலுகா இடையார் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் இருந்தது.

விசாரணையில் அவர் ஆவணத்தான்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (30) என்பதும், இவர் ஒரு மளிகை கடையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் கிராமங்களில் மளிகை பொருட்களை விற்பனை செய்த தொகையை கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments